பஞ்சாபை பந்தாடியது மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
பஞ்சாபை பந்தாடியது மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ். இதன்மூலம் அந்த அணி 5-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
பஞ்சாப் தொடக்க வீரர் ஹஷிம் ஆம்லா 60 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் குவித்தபோதும், அந்த அணியால் வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணியில் ஷான் மார்ஷ்-ஹஷிம் ஆம்லா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தது. ஷான் மார்ஷ் 21 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து வெளியேற, ஆம்லாவுடன் இணைந்தார் ரித்திமான் சாஹா. இந்த ஜோடி சற்று நிதானமாக ஆட, முதல் 10 ஓவர்களில் 69 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப்.
கிருனால் பாண்டியா வீசிய 11-ஆவது ஓவரில் ஆம்லா சிக்ஸரை விளாசி, அதிரடியில் இறங்க, அதே ஓவரில் ரித்திமான் சாஹா ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 15 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஆம்லா-மேக்ஸ்வெல் அதிரடி: இதையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்க, மலிங்கா வீசிய 12-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசிய ஆம்லா, 34 பந்துகளில் அரை சதம் கண்டார். மெக்லீனாகான் வீசிய 15-ஆவது ஓவரை எதிர்கொண்ட மேக்ஸ்வெல், அதில் 3 சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட, அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் கிடைத்தன.
மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் ஆம்லா தன் பங்குக்கு இரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாச, அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தன. இதன்பிறகு தொடர்ந்து வேகம் காட்டிய மேக்ஸ்வெல், 18 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்து பூம்ரா பந்துவீச்சில் போல்டு ஆனார். இந்த ஜோடி 5.3 ஓவர்களில் 83 ரன்கள் குவித்தது.
பின்னர் வந்த மார்கஸ் ஸ்டானிஸ் 1 ரன்னில் வெளியேற, அக்ஷர் படேல் களம்புகுந்தார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஆம்லா, மலிங்கா வீசிய கடைசி ஓவரின் முதல் இரு பந்துகளில் இரு சிக்ஸர்களை விளாசி, 58 பந்துகளில் சதத்தை எட்டினார். டி20 போட்டியில் அவர் எடுத்த முதல் சதம் இது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. ஆம்லா 104, அக்ஷர் படேல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 129 ரன்கள் குவித்தது.
மும்பை தரப்பில் மெக்லீனாகான் 4 ஓவர்களில் 46 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மலிங்கா 4 ஓவர்களில் 58 ரன்களை வாரி வழங்கியபோதும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
மும்பை அதிரடி: பின்னர் பேட் செய்த மும்பை அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸரை விளாசி அதிரடியில் இறங்கினார். மறுமுனையில் பார்த்திவ் படேல் வேகம் காட்ட, 5 ஓவர்களில் 68 ரன்களை எட்டியது மும்பை.
மார்கஸ் ஸ்டானிஸ் வீசிய அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய படேல், 5-ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவர்களில் 81 ரன்கள் குவித்தது. இதையடுத்து வந்த நிதிஷ் ராணாவும் அதிரடியாக ரன் சேர்க்க, ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் அரை சதம் கண்டார். ராணாவும், பட்லரும் வெளுத்து வாங்க, 10 ஓவர்களில் 123 ரன்களை எட்டியது மும்பை. ஸ்வப்னில் சிங் வீசிய 12-ஆவது ஓவரில் ராணா இரு சிக்ஸர்களை விரட்ட, சந்தீப் சர்மா வீசிய அடுத்த ஓவரில் பட்லர் இரு சிக்ஸர்களை விளாசினார்.மும்பை அணி 13.1 ஓவர்களில் 166 ரன்களை எட்டியபோது பட்லரின் விக்கெட்டை இழந்தது. அவர் 37 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவித்தார். இதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்கினார்.
இஷாந்த் சர்மா வீசிய 15-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசிய ராணா, 29 பந்துகளில் அரை சதம் கண்டார். அதே ஓவரில் பாண்டியா ஒரு சிக்ஸர், இரு பவுண்டரியை விரட்ட, மோஹித் சர்மா வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸரை விளாசி போட்டியை முடித்தார் ராணா. மும்பை அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. ராணா 34 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 62, பாண்டியா 4 பந்துகளில் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் மார்கஸ் ஸ்டானிஸ், அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com