ரெய்னா 84; குஜராத்துக்கு 2-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.
ரெய்னா 84; குஜராத்துக்கு 2-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.
இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 2-ஆவது வெற்றியைப் பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா 46 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்தார்.
கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை சுநீல் நரேனும், கேப்டன் கெளதம் கம்பீரும் தொடங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய சுநீல் நரேன், பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரிகளையும், ஜேம்ஸ் ஃபாக்னர் வீசிய அடுத்த ஓவரில் 4 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். இதையடுத்து மூன்றாவது ஓவரை வீச பாசில் தம்பியை அழைத்தார் ரெய்னா. அந்த ஓவரையும் விட்டுவைக்காத நரேன், அதில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். இதனால் 3 ஓவர்களில் 44 ரன்களை எட்டியது கொல்கத்தா.
இதையடுத்து தனது பெளலர்கள் மீதான நம்பிக்கையை இழந்த கேப்டன் ரெய்னா, 4-ஆவது ஓவரை அவரே வீசினார். அதற்கு உடனடியாக பலனும் கிடைத்தது. அவருடைய பந்தை அடித்து ஆட முற்பட்ட நரேன், ஃபாக்னரிடம் கேட்ச் ஆனார். அவர் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்து வெளியேற, ராபின் உத்தப்பா களம்புகுந்தார். அவர் 6 ரன்களில் இருந்தபோது ரெய்னா பந்துவீச்சில் மெக்கல்லம் கோட்டைவிட்ட கேட்ச்சால் வாழ்வு பெற்றார்.
இதன்பிறகு கம்பீரும், உத்தப்பாவும் அசத்தலாக ஆட, 10 ஓவர்களில் 96 ரன்களை எட்டியது கொல்கத்தா. அந்த அணி 11.3 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது கம்பீரின் விக்கெட்டை இழந்தது. அவர் 28 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து மணீஷ் பாண்டே களமிறங்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய உத்தப்பா, ஜடேஜா பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விரட்டி, 35 பந்துகளில் அரை சதம் கண்டார். தொடர்ந்து சிக்ஸரையும், பவுண்டரியையும் விரட்டிய உத்தப்பா 48 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் குவித்து பிரவீண் குமார் பந்துவீச்சில் மெக்கல்லத்திடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து யூசுப் பதான் களமிறங்க, மணீஷ் பாண்டே 21 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 24, சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது கொல்கத்தா. யூசுப் பதான் 4 பந்துகளில் 11, ஷகிப் அல்ஹசன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குஜராத் தரப்பில் பிரவீண் குமார், ஜேம்ஸ் ஃபாக்னர், பாசில் தம்பி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி தொடக்கம்: பின்னர் ஆடிய குஜராத் அணியில் ஆரோன் ஃபிஞ்ச்-பிரென்டன் மெக்கல்லம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.3 ஓவர்களில் 42 ரன்கள் சேர்த்தது. ஆரோன் ஃபிஞ்ச் 15 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்து வெளியேற, கேப்டன் சுரேஷ் ரெய்னா களம்புகுந்தார்.
மெக்கல்லம் தொடர்ந்து அதிரடி காட்ட, குஜராத் அணி 5 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதன்பிறகு தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 6.2 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது மெக்கல்லம் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு தினேஷ் கார்த்திக் 3, இஷன் கிஷான் 4, டுவைன் ஸ்மித் 5 ரன்களில் வெளியேற, ரவீந்திர ஜடேஜா களம்புகுந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் வெளுத்து வாங்கிய ரெய்னா 32 பந்துகளில் அரை சதம் கண்டார். மறுமுனையில் நின்ற ஜடேஜாவும் தன் பங்குக்கு அதிரடியாக ரன் சேர்க்க, குஜராத்தின் வெற்றி எளிதானது. அந்த அணி 17.5 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்திருந்தபோது ரெய்னா ஆட்டமிழந்தார். அவர் 46 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து ஜேம்ஸ் ஃபாக்னர் களமிறங்க, 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்து வெற்றி கண்டது குஜராத். ஜடேஜா 13 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 19, ஃபாக்னர் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்ட்டர் நைல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பவுண்டரி, சிக்ஸரில் 42 ரன்கள் விளாசிய சுநீல் நரேன்
கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான சுநீல் நரேன் 17 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். இந்த ரன்கள் அனைத்தும் சிக்ஸர் மற்றும் பவுண்டரி மூலம் எடுக்கப்பட்டவையாகும். அவர் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளை விளாசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com