ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத்துக்கு 2-ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.
இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா 46 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்தார்.
கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அந்த அணியில் உத்தப்பா 72, சுநீல் நரேன் 42 ரன்கள் எடுத்தனர்.
குஜராத் தரப்பில் பிரவீண் குமார், ஜேம்ஸ் ஃபாக்னர், பாசில் தம்பி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி தொடக்கம்: பின்னர் ஆடிய குஜராத் அணியில் ஆரோன் ஃபிஞ்ச்-பிரென்டன் மெக்கல்லம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.3 ஓவர்களில் 42 ரன்கள் சேர்த்தது. ஆரோன் ஃபிஞ்ச் 31, மெக்கல்லம் 33 ரன்கள் எடுத்தனர்.
இதன்பிறகு தினேஷ் கார்த்திக் 3, இஷன் கிஷான் 4, டுவைன் ஸ்மித் 5 ரன்களில் வெளியேற, ரவீந்திர ஜடேஜா களம்புகுந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் வெளுத்து வாங்கிய ரெய்னா 32 பந்துகளில் அரை சதம் கண்டார். அவர் 46 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இறுதியில் 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்து வெற்றி கண்டது குஜராத். ஜடேஜா 13 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 19, ஃபாக்னர் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்ட்டர் நைல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com