அமைதியாக இருந்தால் ரன் ரேட் பெரியதல்ல

கிரிக்கெட்டில் இலக்கை துரத்துகிறபோது அமைதியாக இருந்தால் எந்தவொரு ரன் ரேட்டும் பெரியதல்ல என்று புணே வீரர் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் இலக்கை துரத்துகிறபோது அமைதியாக இருந்தால் எந்தவொரு ரன் ரேட்டும் பெரியதல்ல என்று புணே வீரர் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.

புணேவில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதை தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.

இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த புணே அணியில் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி 34 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவிக்க, அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புணே அணி கடைசி 4 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அசராமல் ஆடிய தோனி பவுண்டரியையும், சிக்ஸரையும் விளாசி வெற்றி தேடித்தந்தார்.

இதன்மூலம் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கும் தோனி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்தவொரு ரன் ரேட்டும் பெரியதல்ல. எதிரணி பந்துவீச்சாளர்கள் தங்களின் திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து ரன் ரேட் அளவு மாறக்கூடும். 7, 8, 9, 10 என எத்தனை ரன்களாக இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் நாம் அமைதியாக இருப்பது முக்கியமாகும்.

இங்கே நெருக்கடியை யார் சமாளிக்கிறார்கள் என்பதுதான் விஷயம். கடைசி 4 ஓவர்களில் எதிரணி மோசமாக ஆடும்போது, நாம் சிறப்பாக ஆடினால் 60 ரன்கள் எடுத்துவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால் இதுபோன்று எல்லா நேரங்களிலும் வெல்ல முடியாது. நாங்கள் சிறப்பாக போட்டியை முடித்ததாக நினைக்கிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com