இதுவே உங்கள் கடைசி ஆட்டம்: மிரட்டிய கம்பீர்; அசத்திய வீரர்கள்!

முனைப்புடன் விளையாடாதவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிற கடைசிப் போட்டி...
இதுவே உங்கள் கடைசி ஆட்டம்: மிரட்டிய கம்பீர்; அசத்திய வீரர்கள்!

ஞாயிறு அன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  19.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டது. பெங்களூர் தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

131 ரன்கள் என்பது மோசமான ஸ்கோர் அல்ல. ஆனால் கொல்கத்தா கேப்டன் கம்பீரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்ன செய்தார் தெரியுமா? இதுகுறித்து ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருப்பதாவது:

கடந்த 7 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் உள்ளேன். ஆனால் அன்றைய தினம் நான் சீற்றத்தில் இருந்தேன். குஜராத் அணிக்கு எதிரான தோல்வி இன்னமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் 1 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்து 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தோம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இடைவேளையில் நான் எப்போதும் பதூரி மீன் என்கிற உணவை எடுத்துக்கொள்வேன். ஆனால் அன்று அதற்குப் பதிலாக குளியலறையில் ஷவர் முன்பு 4 நிமிடங்கள் நின்றேன், என் கொதிப்பு அடங்கும் என்று. ஆனால் அடங்கவில்லை. என் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயன்றேன். ஆனால் அதிலும் தோல்வியடைந்தேன். 

இடைவேளை முடிகிற சமயம் அணி வீரர்களை ஒன்று திரட்டினேன். வெளியே 60,000 பேர் ஆரவாரம் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் ஓய்வறை நிசப்தமாக இருந்தது. வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுகூட கேட்கும் அளவுக்கு.

நான் பேசத் தொடங்கினேன். எல்லாவற்றையும் கொட்டினேன். வீரர்கள் முனைப்புடன் விளையாடவேண்டும் என்றெண்ணினேன். அவர்கள் போராடவேண்டும், வெற்றி பெறவேண்டும் என்று விரும்பினேன். உறுதியாக சொன்னேன் - முனைப்புடன் விளையாடாதவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிற கடைசிப் போட்டி இதுவாக இருக்கும். குறைந்தபட்சம் என் தலைமையில். 

நான் இப்படிப் பேசியதைப் பார்த்து வீரர்கள் பலர் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். பெரும்பாலும் கொல்கத்தா அணி வீரர்களுடன் சகஜமாகவே நான் பழகுவேன். குறும்புகளும் செய்வேன். ஆனால் அன்றைய தினத்தின் மோசமான பேட்டிங் என்னைப் பாதித்தது. அதனால் அப்படிப் பேசவேண்டியதாயிற்று. ஆனால் அணி வீரர்கள் என் பேச்சுக்கு சரியான பதில் அளித்தார்கள். தங்கள் வாழ்க்கையில் முக்கியமான போட்டி என்பதாக விளையாடினார்கள். அதனால்தான் நாங்கள் வெற்றி கண்டோம். ஆட்டம் முடிந்தபிறகு வீரர்களிடம் நான் மோசமாக நடந்துகொண்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் கூறினேன் என்று கம்பீர் எழுதியுள்ளார்.

ஞாயிறு அன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 9 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் அனைவருமே ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோலி, டிவில்லியர்ஸ், கேதார் ஜாதவ் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கோல்ட்டர் நைல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com