புணே த்ரில் வெற்றி; மும்பையின் தொடர் வெற்றிக்கு 'செக்'

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-ஆவது லீக் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.
புணே த்ரில் வெற்றி; மும்பையின் தொடர் வெற்றிக்கு 'செக்'

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-ஆவது லீக் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.
இதன்மூலம் மும்பையின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது புணே. முன்னதாக மும்பை அணி தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வென்றிருந்தது.
மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த புணே அணியில் திரிபாதியும், அஜிங்க்ய ரஹானேவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஜான்சன் வீசிய முதல் ஓவரில் சிக்ஸரை விளாசி அதிரடியில் இறங்கிய திரிபாதி, மெக்லீனாகான் வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியை விரட்டினார். அதே ஓவரில் ரஹானே தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை விரட்ட, புணேவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 
அந்த அணி 9.3 ஓவர்களில் 76 ரன்களை எட்டியபோது ரஹானேவின் விக்கெட்டை இழந்தது. அவர் 32 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்டீவன் ஸ்மித் களமிறங்க, மறுமுனையில் நின்ற திரிபாதி, கரண் சர்மா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசினார். இதனால் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எட்டியது புணே. 
அந்த அணி 11.3 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்திருந்தபோது திரிபாதி ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். இதன்பிறகு ஸ்மித் 17, பென் ஸ்டோக்ஸ் 17, தோனி 7 ரன்களில் ஆட்டமிழக்க, புணே அணி 17.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதன்பிறகு வந்த மனோஜ் திவாரி 13 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து வெளியேற, புணே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் கரண் சர்மா, ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
மும்பை தோல்வி: பின்னர் ஆடிய மும்பை அணியில் ஜோஸ் பட்லர்-பார்த்திவ் படேல் ஜோடி 4.2 ஓவர்களில் 35 ரன்கள் சேர்த்தது. பட்லர் 17 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த நிதிஷ் ராணா 3 ரன்களில் நடையைக் கட்டினார். 
இதையடுத்து வந்த கேப்டன் ரோஹித் சர்மா பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்க, பார்த்திவ் படேல் 27 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் போல்டு ஆனார். 
இதன்பிறகு களம்புகுந்த கரண் சர்மா 11 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கிரண் போலார்ட். ரோஹித் சர்மா சற்று வேகம் காட்ட, கடைசி 4 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 
ஆனால் இம்ரான் தாஹிர் வீசிய 17-ஆவது ஓவரில் போலார்ட் (9 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹார்திக் பாண்டியா களம்புகுந்தார். 17-ஆவது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன. இதனால் மும்பை அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது.
இதனிடையே ரோஹித் சர்மா 33 பந்துகளில் அரை சதமடிக்க, பாண்டியா இரு பவுண்டரிகளை விரட்டினார். இதனால் கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் வீசிய 19-ஆவது ஓவரில் மும்பை அணியால் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 
கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. உனட்கட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பாண்டியா (13 ரன்களில்) ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் சிக்ஸரை விளாசிய ரோஹித் சர்மா, அதற்கடுத்த பந்தில் உனட்கட்டிடமே கேட்ச் ஆனார். அவர் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார். அப்போதே மும்பையின் தோல்வி உறுதியானது. கடைசிப் பந்தில் ஹர்பஜன் சிங் சிக்ஸரை விளாசியபோதும், மும்பை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
4 ஓவர்களில் ஒரு மெய்டனை வீசியதோடு, 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

ஹர்பஜன் சிங் 200 விக்கெட் 
புணே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை போல்டாக்கியதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் ஹர்பஜன் சிங். அவர், தனது 225-ஆவது டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com