நடுவருடன் வாக்குவாதம்: ரோஹித் சர்மாவுக்கு அபராதம்

நடுவருடன் வாக்குவாதம்: ரோஹித் சர்மாவுக்கு அபராதம்

ரைஸிங் புணே சூப்பர்ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆட்ட ஊதியத்தில்

ரைஸிங் புணே சூப்பர்ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆட்ட ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது முதலில் பேட் செய்த புணே, 160 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 19-ஆவது ஓவர் இறுதியில் 144 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
ஜெயதேவ் உனத்கட் வீசிய அந்த ஓவரை, மும்பை கேப்டன் ரோஹித் சர்மா எதிர்கொண்டார். அந்த ஓவரின் 3-ஆவது பந்தை சந்தித்த ரோஹித், அது அகலப்பந்தாக (வைடு) செல்லும் என்று கணித்து அதை அடிக்காமல் தவிர்த்தார்.
ஆனால், அந்தப் பந்தை வைடாக நடுவர் எஸ்.ரவி அறிவிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ரோஹித் சர்மா, நடுவரிடம் சென்று ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மற்றொரு நடுவர் வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் மும்பை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், ரோஹித் சர்மாவின் அந்தச் செயல் ஐபிஎல் விதிகளின்படி லெவல் 1 குற்றம் என்றும், இந்த சீசனில் அவர் 2-ஆவது முறையாக இந்தக் குற்றத்தில் ஈடுபடுவதாகவும், இதனால் அவரது ஆட்டத்துக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்பஜன் ஆதரவு: இந்நிலையில், ரோஹித்துக்கு ஆதரவாக அவரது அணி வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஜெயதேவ் வீசிய அந்தப் பந்து உண்மையில் மிகவும் வெளியில் சென்றது. ஆனால், அது வைடா இல்லையா என தெளிவாகத் தெரியவில்லை. என்னைப் பொருத்த வரையில் அது வைடு என நினைக்கிறேன்.
உண்மையில் அந்தச் சூழ்நிலையில் ரோஹித் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. அவர் ஏன் அந்தப் பந்துக்கு வைடு வழங்கவில்லை என்று கேட்டார். விதிகள் படி அது சரியா என தெரிந்துகொள்ள விரும்பினார். தான் எங்கு நின்று பேட்டிங் செய்ய வேண்டும் என்று கேட்டார் என்று ஹர்பஜன் சிங் கூறினார்.


ஆட்டம் தாமதம்...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரில் நடைபெறுவதாக இருந்த ஆட்டம் மழையால் தாமதானது.


இன்றைய ஆட்டம்
புணே-கொல்கத்தா
இடம்: புணே, நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com