ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து புதன்கிழமை 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து புதன்கிழமை 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
எனினும், சகவீராங்கனையான சாய்னா நெவால் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் தினார் தயா அயுஸ்டினை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தை 31 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டுவந்த சிந்து, 21-8, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில், போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த இந்திய வீராங்கனையான சாய்னா, ஜப்பானின் சயாகா சாடோவுடன் மோதினார். இதில் 19-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் சாய்னா தோல்வியடைந்தார். இருவருக்கும் இடையேயான இந்த ஆட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்தப் போட்டியின் முந்தைய சீசன்களில் சாய்னா 2 முறை வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில், உலகின் 13-ஆம் நிலை வீரரும், இந்தியருமான அஜய் ஜெயராம், போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த சீனாவின் ஹெளவெய் தியானை 21-18, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
எனினும், மற்றொரு முதல் சுற்றில் ஹெச்.எஸ்.பிரணாய் தோல்வி கண்டார். போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த ஹாங்காங் வீரரான நிக் கா லாங் அங்கஸுடன் மோதிய அவர், 16-21, 21-13, 19-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் சிவெய் ஜெங்-கிங்சென் சென் ஜோடியிடம் 15-21, 21-14, 16-21 என்ற செட் கணக்கில் தோற்றது.
மகளிர் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி, கொரியாவின் சே யூ ஜங்-கிம் சோ யோங் இணையிடம் 20-22, 16-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி, சீனாவின் ஃபு ஹாஃபெங்-ஸாங் நான் இணையிடம் 9-21, 18-21 என்ற செட் கணக்கில் தோல்விகண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com