7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் லயன்ஸ் அணி.
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் லயன்ஸ் அணி.
பெங்களூர் அணி, தொடர்ந்து 2-ஆவது முறையாக தோல்வியைச் சந்திப்பது இது முதல்முறையாகும்.
பெங்களூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூர் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத், 13.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக, டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியில் கிறிஸ் கெயில், கேப்டன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இருவருமே அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், கேப்டன் கோலி 13 பந்துகளுக்கு ஒரு சிக்ஸருடன் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து டி வில்லியர்ஸ் களம் இறங்க, மறுமுனையில் நின்றிருந்த கெயில், ஆன்ட்ரு டை பந்துவீச்சில், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். அவர் 11 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து வந்த டிராவிஸ் ஹெட், முதல் பந்திலேயே டக் அவுட்டானார். பின்னர் வந்த கேதர் ஜாதவ் சற்று நிலைத்து ஆடி 18 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்து போல்டாகினார்.
அவரை அடுத்து மன்தீப் சிங் களம் காண, மறுமுனையில் தடுமாறி வந்த டி வில்லியர்ஸ் 11 பந்துகளுக்கு 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் பவன் நெகி களமிறங்க, மன்தீப் சிங் 14 பந்துகளுக்கு 8 ரன்கள் எடுத்திருந்தபோது ஆன்ட்ரு டை பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சாமுவேல் பத்ரி களத்துக்கு வர, 19 பந்துகளுக்கு 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் எடுத்திருந்த பவன் நெகி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய பத்ரி 3 பந்துகளுக்கு 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரீநாத் அரவிந்த் 16 பந்துகளுக்கு 9 ரன்கள் எடுத்தார்.
கடைசி விக்கெட்டாக யுவேந்திர சாஹல் 2 பந்துகளுக்கு 1 ரன் எடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது பெங்களூர். அங்கித் சோனி 12 பந்துகளுக்கு ஒரு பவுண்டரியுடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.
குஜராத் தரப்பில் ஆன்ட்ரு டை 3, ஜடேஜா 2, பாசில் தாம்பி, அங்கித் சோனி, ஃபாக்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஃபிஞ்ச் அதிரடி: இதையடுத்து 135 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில், தொடக்க வீரர் இஷான் கிஷன் 11 பந்துகளுக்கு 4 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மெக்கல்லம் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, கேப்டன் ரெய்னா-ஆரோன் ஃபிஞ்ச் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 22 பந்துகளில் அரைசதம் கடந்தார் ஃபிஞ்ச். இந்நிலையில் 34 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் எடுத்திருந்த அவர், பவன் நெகி பந்துவீச்சில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா களம் இறங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், 13.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வென்றது குஜராத். ரெய்னா 30 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 34 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பெங்களூர் தரப்பில் சாமுவேல் பத்ரி 2, பவன் நெகி ஒரு விக்கெட் வீழ்த்தினர். 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய குஜராத்தின் ஆன்ட்ரு டை ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.


இன்றைய ஆட்டங்கள்
கொல்கத்தா-டெல்லி
இடம்: கொல்கத்தா, நேரம்: மாலை 4
பஞ்சாப்-ஹைதராபாத்
இடம்: மொஹாலி, நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com