ஊக்கமருந்து பயன்படுத்தினால் சிறை: அரசு ஆலோசனை

விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், அவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு

விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், அவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறியதாவது: ஊக்கமருந்து பயன்பாட்டை குற்றச்செயலாக அறிவிக்கும் புதிய சட்டத்தின் மூலம், ஊக்கமருந்து பயன்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது தொடர்பாக விரிவாக கலந்தாலோசித்து வருகிறோம். சில வேளைகளில் விளையாட்டு வீரர்கள் தங்களை அறியாமலேயே, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்திவிடுகின்றனர். பயிற்சியாளர்களின் அந்தத் தவறுக்கு விளையாட்டு வீரர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆனால், பயிற்சியாளர்கள் தப்பிவிடுகின்றனர். ஆகையால் பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் என இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட வேண்டும்.
எனவே, அதுதொடர்பான புதிய சட்டத்தை கொண்டுவருவது குறித்து சட்ட அமைச்சகம் உள்பட, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து வருகிறோம் என்று விஜய் கோயல் கூறினார்.
இந்தியா 3-ஆவது இடம்: ஊக்கமருந்து பயன்படுத்தும் வீரர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக 3-ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (நாடா) இயக்குநர் நவீன் அகர்வால் கூறியதாவது:
சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா) வெளியிட்ட 2015-ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, ஊக்கமருந்து பயன்படுத்தும் வீரர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக முதல் 3 இடங்களுக்குள் உள்ளது.
இதில் ரஷியா (176 வீரர்கள்) முதலிடத்திலும், இத்தாலி (129) இரண்டாவது இடத்திலும், இந்தியா (117) மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவில், ஆண்டுக்கு சுமார் 7,000 மாதிரிகளில் நாடா பரிசோதனை மேற்கொள்கிறது என்று நவீன் அகர்வால் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com