ஸ்டட்கார்ட் ஓபன்: முதல் சுற்றில் ஷரபோவா வெற்றி

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா தனது முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஸ்டட்கார்ட் ஓபன்: முதல் சுற்றில் ஷரபோவா வெற்றி

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா தனது முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் 15 மாதங்களுக்கு விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்த ஷரபோவா, ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மூலம் மீண்டும் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஷரபோவா தனது முதல் சுற்றில் இத்தாலியின் ராபர்டா வின்சியை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் ஷரபோவா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அவர் தனது 2-ஆவது சுற்றில் சகநாட்டு வீராங்கனையான எகாடெரினா மகரோவாவை எதிர்கொள்கிறார்.
முன்னதாக, ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு பேசிய ஷரபோவா, 'டென்னிஸ் போட்டிக்காக மீண்டும் களமிறங்கிய இந்தத் தருணத்தில் மிகச் சிறப்பாக உணர்கிறேன். இந்த சந்தர்ப்பத்துக்காக நீண்ட காலமாக காத்திருந்தேன்' என்றார்.
ஷரபோவா மீதான தடைக்காலம் புதன்கிழமை நள்ளிரவுதான் முடிவுக்கு வந்தது. இதனால், அதற்கு முன்பாக போட்டிக்கான களத்தில் பயிற்சி எடுக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. அருகில் இருந்த டென்னிஸ் கிளப் ஒன்றில் அவர் பயிற்சி மேற்கொண்டார்.
இதனிடையே, இதர முதல் சுற்றுப் போட்டிகளில், ரஷியாவின் எலினா வெஸ்னினா 7-6(2), 6-2 என்ற செட் கணக்கில் சகநாட்டு வீராங்கனையான டரியா கஸாட்கினாவை வீழ்த்தினார். பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா, 7-6(5), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நவோமி ஒஸாகாவை தோற்கடித்தார்.
2-ஆவது சுற்றுகளில் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவெய்ட் 2-6, 7-6(1), 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கார்பின் முகுருஸாவையும், ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பார்பரா ஸ்டிரைக்கோவாவையும் வீழ்த்தினர்.

'ஷரபோவா மீது வாழ்நாள் தடை வேண்டும்'
ஊக்கமருந்து விவகாரத்தில் தண்டனை முடிந்து மீண்டும் போட்டிக்குத் திரும்பியுள்ள மரியா ஷரபோவா மீது வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கனடா வீராங்கனை இயுஜின் பெளசார்டு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'ஷரபோவா விளையாடுவதற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது சரியல்ல. ஏமாற்றுக்காரரான அவர், வாழ்நாள் முழுவதும் விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது.
அவருக்கு அனுமதி அளித்திருப்பது, நியாயமான முறையில் விளையாடி வரும் இதர வீராங்கனைகளுக்கு அநீதி வழங்குவதைப் போன்ற செயலாகும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com