26 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது.
26 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 33-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தியது.
மொஹாலியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களுக்கு வீழ்ந்தது.
முன்னதாக, டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச தீர்மானித்தது. ஹைதராபாத் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஷிகர் தவன் களமிறங்கினர்.
இருவருமே அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 25 பந்துகளில் அரைசதம் கடந்தார் டேவிட் வார்னர். மறுமுனையில் தவன் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந்நிலையில், 27 பந்துகளுக்கு 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னரை போல்டாக்கினார் மேக்ஸ்வெல். அடுத்து வந்த கேன்வில்லியம்ஸன், தவனுடன் இணைந்தார்.
அதிரடியாக ஆடி வந்த தவன் 48 பந்துகளுக்கு 9 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 77 ரன்கள் எடுத்திருந்தபோது மோஹித் சர்மா பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த யுவராஜ் சிங் 12 பந்துகளுக்கு 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் அக்ஸர் படேலிடம் கேட்ச் கொடுத்தார். பின்னர் ஹென்ரிக்ஸ் களம் காண, மறுமுனையில் அரைசதம் கடந்தார் வில்லியம்ஸன்.
20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். கேன் வில்லியம்ஸன் 27 பந்துகளுக்கு 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள், ஹென்ரிக்ஸ் 6 பந்துகளுக்கு 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் தரப்பில் மேக்ஸ்வெல் 2, மோஹித் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஷான் மார்ஷ் அசத்தல்: இதையடுத்து 208 ரன்கள் இலக்குடன் களம் கண்ட பஞ்சாப் அணியில் ஷான் மார்ஷ் மட்டும் அசத்தலாக ஆடினார். 50 பந்துகளை சந்தித்த அவர், 14 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் விளாசினார்.
எஞ்சிய வீரர்களில் மார்டின் கப்டில் 11 பந்துகளுக்கு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 23, இயான் மோர்கன் 21 பந்துகளுக்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்தனர்.
மனன் வோரா 3, ரித்திமான் சாஹா 2, மோஹித் சர்மா 2 ரன்களுக்கு சுருண்டனர். கேப்டன் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார்.
20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது பஞ்சாப். இஷாந்த் சர்மா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஹைதராபாத் தரப்பில் நெஹ்ரா, சித்தார் தலா 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் 2, ரஷீத் கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ரஷீத் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com