சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி: இன்று பிரிட்டனை சந்திக்கிறது இந்தியா

26-ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கிப் போட்டி மலேசியாவின் இப்போ நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

26-ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கிப் போட்டி மலேசியாவின் இப்போ நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
இதில், முதல் ஆட்டத்தில் இந்தியா-பிரிட்டன் அணிகள் மோதுகின்றன.
பிரிட்டனைத் தொடர்ந்து, 30-ஆம் தேதி நியூஸிலாந்துடனும், மே 2-ஆம் தேதி ஆஸ்திரேலியா, 3-ஆம் தேதி ஜப்பான், 5-ஆம் தேதி மலேசியா அணிகளுடன் மோதுகிறது இந்திய அணி.
கடந்த சீசனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்தியா, 9 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் அதில் தோல்வி கண்டது. எனவே, இம்முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா மீண்டும் களம் காண்கிறது.
இந்திய சீனியர் அணிக்கு கடந்த சீசனில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஹர்மன்பிரீத் சிங் அப்போது குறிப்பிடத்தக்க வகையில் ஆடினார். அதேபோல், இந்த சீசனிலும் சீனியர் அணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜூனியர் அணியைச் சேர்ந்த தடுப்பு ஆட்டக்காரர் குரீந்தர் சிங், நடுகள வீரர்கள் சுமித் மற்றும் மன்பிரீத் சிங் ஆகிய 3 வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் கூறியதாவது:
ஜூனியர் அணியில் இருந்து சீனியர் அணிக்கு வந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்பிரீத் சிங், தற்போது அணியில் புதிதாக இணைந்துள்ள ஜூனியர் வீரர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார்.
அதேவேளையில், அணியில் ஏற்கெனவே அனுபவம் மிகுந்த பல வீரர்கள் இருப்பதால், இளம் வீரர்கள் அதீத நெருக்கடிக்கு ஆளாக்கப்பட மாட்டார்கள் என்று ஓல்ட்மன்ஸ் கூறினார்.
தற்போது உலகின் 6-ஆம் நிலை அணியாக இருக்கும் இந்தியாக, ஜூன் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள உலக லீக் அரையிறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில் சுல்தான் அஸ்லான் ஷா போட்டியை எதிர்கொள்கிறது.
இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் பட்சத்தில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிபெற்றுவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com