தொடரும் கொல்கத்தாவின் வெற்றி நடை: டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 32-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
தொடரும் கொல்கத்தாவின் வெற்றி நடை: டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 32-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா, 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக, டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச தீர்மானித்தது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியவர்களில், கருண் நாயர் 17 பந்துகளுக்கு 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
உடன் வந்த சஞ்சு சாம்சன் நிலைத்து ஆட, அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சாம்சனுடன் நிலைத்தார். இந்நிலையில் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார் சாம்சன். 38 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்திருந்த அவர், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் நோக்கி நகர, சாம்சனை தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் 4 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
இதனிடையே, 34 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்திருந்த ஷ்ரேயாஸ் ஐயரை எஸ்பிடபிள்யு முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் நாதன் கோல்டர் நைல்.
பின்னர் வந்த கிறிஸ் மோரிஸ் 11, கோரே ஆண்டர்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இவ்வாறாக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது டெல்லி. அங்கித் பாவ்னே 12, பட் கம்மின்ஸ் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்டர் நைல் 3, உமேஷ் யாதவ், சுனீல் நரைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
உத்தப்பா கலக்கல்: இதையடுத்து 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் கண்டது கொல்கத்தா. தொடக்க ஆட்டக்காரர் சுனீல் நரைன் 4 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நின்ற கேப்டன் கம்பீருடன் இணைந்தார், அடுத்து வந்த உத்தப்பா. இந்த ஜோடி அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அரைசதம் அடித்த உத்தப்பா, 33 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள், 4 சிக்ஸருடன் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மணீஷ் பாண்டேவை 5 ரன்களில் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் ரபாடா. தொடர்ந்து ஷெல்டன் ஜாக்ஸன் களத்துக்கு வர, மறுமுனையில் 39 பந்துகளில் அரைசதம் கண்டார் கம்பீர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வென்றது கொல்கத்தா. கம்பீர் 52 பந்துகளுக்கு 11 பவுண்டரிகளுடன் 71 ரன்கள், ஜாக்ஸன் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டெல்லி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கம்பீர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com