சூப்பர் ஓவரில் வென்றது மும்பை

ஐபில் கிரிக்கெட் தொடரின் 35-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் குஜராத் லயன்ஸை தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
சூப்பர் ஓவரில் மும்பைக்கு வெற்றி தேடித்தந்த ஜஸ்பிரித் பூம்ராவை பாராட்டும் சகவீரர்கள்.
சூப்பர் ஓவரில் மும்பைக்கு வெற்றி தேடித்தந்த ஜஸ்பிரித் பூம்ராவை பாராட்டும் சகவீரர்கள்.

ஐபில் கிரிக்கெட் தொடரின் 35-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் குஜராத் லயன்ஸை தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.
முதலில் பேட் செய்த குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 153 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ஆட்டம் 'டை'யில் முடிந்தது.
இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் பேட் செய்த மும்பை அணி, ஜேம்ஸ் ஃபாக்னர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த குஜராத் அணியால், பூம்ரா ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா பேட்டிங்கை தேர்வு செய்தார். இஷன் கிஷானும், பிரென்டன் மெக்கல்லமும் அந்த அணியின் இன்னிங்ஸை தொடங்கினர்.
மெக்லீனாகான் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய இஷன் கிஷான், மலிங்கா வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். அதே ஓவரில் பவுண்டரி அடித்த மெக்கல்லம், அடுத்த பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து கேப்டன் சுரேஷ் ரெய்னா களமிறங்க, மெக்லீனாகான் வீசிய 3-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாசினார் இஷன் கிஷான். தொடர்ந்து வேகம் காட்டிய இஷன் கிஷான் ஹர்பஜன் சிங் வீசிய அடுத்த ஓவரில் மேலும் இரு பவுண்டரிகளை விரட்ட, 4 ஓவர்களில் 46 ரன்களை எட்டியது குஜராத்.
பூம்ரா வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற ரெய்னா, போலார்ட்டிடம் கேட்ச் ஆனார். அவர் 1 ரன் மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த ஆரோன் ஃபிஞ்ச் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, மலிங்கா பந்துவீச்சில் போல்டு ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் நடையைக் கட்ட, 8.1 ஓவர்களில் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத்.
இதையடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா, சிக்ஸரை விளாசி ரன் கணக்கைத் தொடங்கினார். மறுமுனையில் தொடர்ந்து வேகம் காட்டிய இஷன் கிஷான் 2 ரன்களில் அரை சதத்தை நழுவவிட்டார். அவர் 35 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சேர்த்து ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் போலார்ட்டிடம் கேட்ச் ஆனார்.
அவரைத் தொடர்ந்து ஜடேஜா 21 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் கிருனால் பாண்டியா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். இதன்பிறகு வந்த இர்ஃபான் பதான் 2 ரன்களில் நடையைக் கட்ட, கடைசிக் கட்டத்தில் ஆண்ட்ரூ டை 12 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களும், ஜேம்ஸ் ஃபாக்னர் 27 பந்துகளில் 21 ரன்களும் சேர்த்து வெளியேற, குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது.
மும்பைத் தரப்பில் கிருனால் பாண்டியா 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பார்த்திவ் படேல் 70: பின்னர் ஆடிய மும்பை அணியில் பார்த்திவ் படேல் அதிரடியாக ரன் சேர்க்க, ஜோஸ் பட்லர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து நிதிஷ் ராணா களமிறங்க, தொடர்ந்து வேகம் காட்டிய படேல் 32 பந்துகளில் அரை சதம் கண்டார்.
இதன்பிறகு நிதிஷ் ராணா 19, ரோஹித் சர்மா 5 ரன்களில் நடையைக் கட்ட, பார்த்திவ் படேல் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு போலார்ட் 15 ரன்களில் ஆட்டமிழக்க, கிருனால் பாண்டியாவுடன் இணைந்தார் ஹார்திக் பாண்டியா.
கடைசி 2 ஓவர்களில் மும்பையின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. பாசில் தம்பி வீசிய 19-ஆவது ஓவரின் முதல் பந்தில் ஹார்திக் பாண்டியா (4 ரன்கள்) ஆட்டமிழக்க, அதே ஓவரில் ஹர்பஜன் சிங் (0), மெக்லீனாகான் (1) ஆகியோரும் ஆட்டமிழந்தனர். இதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இர்ஃபான் பதான் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரை விளாசிய பாண்டியா, அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-ஆவது பந்தில் பூம்ரா (0) ஆட்டமிழக்க, 4-ஆவது பந்தில் 2 ரன்களும், அடுத்த பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார் பாண்டியா. கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாண்டியா (20 பந்துகளில் 29 ரன்கள்) ரன் அவுட்டானார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 153 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் மும்பை வெற்றி கண்டது. குஜராத் தரப்பில் பாசில் தம்பி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com