அஸ்வின், சாஹா, ஜடேஜா அரை சதம்: இந்தியா 622 ரன்களில் டிக்ளேர்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அஸ்வின், சாஹா, ஜடேஜா அரை சதம்: இந்தியா 622 ரன்களில் டிக்ளேர்

இலங்கை திணறல்
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் சதமடித்தனர். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்திருந்தது இந்தியா. புஜாரா 128, ரஹானே 103 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜாரா ஆட்டமிழந்தார். அவர் 232 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது.
அஸ்வின் 54: இதையடுத்து ரஹானேவுடன் இணைந்தார் அஸ்வின். இந்த ஜோடி சிறப்பாக ஆட, இந்தியா 106 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது. இந்திய அணி 413 ரன்களை எட்டியபோது ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 222 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் குவித்து புஷ்பகுமாரா பந்துவீச்சில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து விருத்திமான் சாஹா களமிறங்க, ஹெராத் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி, 91 பந்துகளில் அரை சதம் கண்டார் அஸ்வின். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 11-ஆவது அரை சதம் இது. எனினும் அடுத்த பந்தில் அவர் போல்டு ஆனார். அஸ்வின் 92 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார்.
ஜடேஜா 70*: இதன்பிறகு வந்த ஹார்திக் பாண்டியா 20 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து வெளியேற, சாஹாவுடன் ஜோடி சேர்ந்தார் ரவீந்திர ஜடேஜா. இந்த ஜோடி சிறப்பாக ஆட, டிரிங்க்ஸ் இடைவேளையின்போது 135 ஓவர்களில் 501 ரன்கள் குவித்திருந்தது இந்தியா. இதன்பிறகு சாஹா 113 பந்துகளில் அரை சதம் கண்டார்.
இந்தியா 568 ரன்களை எட்டியபோது சாஹா ஆட்டமிழந்தார். அவர் 134 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சேர்த்து, ஹெராத் வீசிய 153-ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விரட்டி 70 பந்துகளில் 8-ஆவது அரை சதத்தை நிறைவு செய்தார் ஜடேஜா.
இதனிடையே முகமது சமி, ஹெராத் பந்துவீச்சில் இரு சிக்ஸர்களை விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 19 ரன்கள் எடுத்தார். இதையடுத்து உமேஷ் யாதவ் களம்புகுந்தார். இந்தியா 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி. அப்போது ஜடேஜா 85 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 70, உமேஷ் யாதவ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கைத் தரப்பில் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை-50/2: பின்னர் ஆடிய இலங்கை அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே உபுல் தரங்காவின் விக்கெட்டை இழந்தது. அவர் 6 பந்துகளில் ரன் ஏதுமின்றி அஸ்வின் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து குஷல் மென்டிஸ் களமிறங்க, கருணாரத்னே 25 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து குஷல் மென்டிஸுடன் இணைந்தார் தினேஷ் சன்டிமல். இந்த ஜோடி தடுப்பாட்டம் ஆட, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. மென்டிஸ் 16, சன்டிமல் 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியத் தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை அணி, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இன்னும் 572 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் 'பாலோ-ஆனை' தவிர்க்க இன்னும் 373 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டதால், இந்த டெஸ்டில் இலங்கை அணி 'பாலோ-ஆன்' ஆவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

பிரதீப் விலகல்
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் தசைப்பிடிப்பு காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் 2-ஆவது நாளில் பந்துவீசவில்லை.
முன்னதாக முதல் டெஸ்டில் அவர் 6 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com