ஜடேஜாவுக்குத் தடை: கடுமையான தண்டனை என ஹர்ஷா போக்ளே கருத்து!

விதிமுறையை மீறியதற்காக இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு பல்லகெலேவில் நடைபெறவுள்ள...
ஜடேஜாவுக்குத் தடை: கடுமையான தண்டனை என ஹர்ஷா போக்ளே கருத்து!

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.  முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்ட நிலையில், "பாலோ-ஆன்' பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்நிலையில், ஐசிசி விதிமுறையை மீறியதற்காக இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு பல்லகெலேவில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை 2-ஆவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது 58-ஆவது ஓவரை வீசினார் ஜடேஜா. அப்போது இலங்கை வீரர் கருணாரத்னே கிரீஸுக்குள் நின்ற நிலையில், பந்தை ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். அதை அபாயகரமானது எனக்கூறி ஜடேஜாவை எச்சரித்தார் நடுவர். கடந்த 24 மாதங்களில் 6-ஆவது முறையாக ஐசிசி விதிமுறையை மீறியிருக்கிறார் ஜடேஜா. இதையடுத்து அவர், 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்துள்ள ஐசிசி, அவருடைய போட்டி ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

ஐசிசியின் இந்தத் தண்டனை பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஹா போக்ளே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: ஜடேஜாவின் தடையைக் கண்டு குழப்பம் அடைந்துள்ளேன். ஆபத்தான செயலாக எனக்குத் தெரியவில்லை. கடினமான தண்டனையாக உள்ளது. குற்றம் என்று சொல்வதுபோல இல்லை. ஒருவேளை அருகிலிருந்து பார்க்கும்போது அது வேறுவிதமாகத் தெரிந்திருக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com