சத்தமில்லாமல் சாதிக்கும் ஜடேஜா!

கடந்த ஓர் ஆண்டில் 4-வது முறையாக டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருக்கிறார் ஜடேஜா...
சத்தமில்லாமல் சாதிக்கும் ஜடேஜா!

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்ட நிலையில், "பாலோ-ஆன்' பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார் ஜடேஜா. இதன்மூலம் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:

* கடந்த ஓர் ஆண்டில் 4-வது முறையாக டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருக்கிறார் ஜடேஜா (ஒட்டுமொத்தமாக 6 முறை). கடந்த ஓர் ஆண்டில் வேறு எந்த வீரரும் இத்தனை முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றதில்லை. அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 3 முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருக்கிறார். ஜடேஜா 16 டெஸ்டுகளில் 4 முறையும் அஸ்வின் 17 டெஸ்டுகளில் இருமுறையும் கடந்த ஒருவருடத்தில் ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார்கள். 

* இந்தப் போட்டியில் ஜடேஜா 236 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாடுகளில் ஜடேஜா அதிக விக்கெட்டுகளை எடுத்த போட்டி இதுதான். இதற்கு முன்பு காலேவில் 138 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்ததே அவருடைய சாதனையாக இருந்தது. 

* இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 9-வது முறையாக ஓர் இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார் ஜடேஜா. வெளிநாடுகளில் இருமுறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

* டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஜடேஜா. 32-ஆவது டெஸ்டில் மேற்கண்ட மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்மூலம் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜடேஜா. முன்னதாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் 34 டெஸ்ட் போட்டிகளில் மேற்கண்ட மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்தது.

* அதேநேரத்தில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார் ஜடேஜா. முதலிடத்தில் அஸ்வின் (29 போட்டிகளில் 150 விக்கெட்டுகள்) இருக்கிறார். இதுதவிர சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 19-ஆவது இடது கை சுழற்பந்து வீச்சாளர், இந்தியாவின் சார்பில் டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-ஆவது வீரர் என்ற பெருமைகளைப் பெற்றிருக்கிறார் ஜடேஜா.

* ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைக்கான பட்டியலில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் தொடருகிறார். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில், இந்தியர்களான ஜடேஜா மற்றும் அஸ்வின் முறையே 2-ஆவது மற்றும் 3-ஆவது இடங்களைப் பிடித்தனர். வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தில் தொடர்கிறார்.

எனினும், ஐசிசி விதிமுறையை மீறியதற்காக ஜடேஜாவுக்கு பல்லகெலேவில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com