உலக தடகள சாம்பியன்ஷிப்: இறுதிச் சுற்றில் தேவிந்தர் சிங்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர் சிங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இலக்கை நோக்கி ஈட்டி எறியும் தேவிந்தர் சிங்.
இலக்கை நோக்கி ஈட்டி எறியும் தேவிந்தர் சிங்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர் சிங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தேவிந்தர் சிங்.
16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஈட்டி எறிதலில் 'பி' பிரிவிலிருந்து தகுதிச்சுற்றில் பங்கேற்ற தேவிந்தர் சிங், தனது முதல் வாய்ப்பில் 82.22 மீ. தூரமும், 2-ஆவது வாய்ப்பில் 82.14 மீ. தூரமும் மட்டுமே ஈட்டி எறிந்தார்.
இந்த நிலையில் 3-ஆவது மற்றும் கடைசி வாய்ப்பில் அபாரமாக செயல்பட்ட தேவிந்தர் சிங் 84.22 மீ. தூரம் எறிந்ததன் மூலம் இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.
ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் 'ஏ' பிரிவிலிருந்து 13 பேரும், 'பி' பிரிவிலிருந்து 7 பேரும் பங்கேற்றனர். அதில் 83 மீ. தூரத்தை எட்டிய அனைவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவர்களில் தேவிந்தர் சிங்கிற்கு 7-ஆவது இடம் கிடைத்தது. ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்று சனிக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது.
தில்லியில் நடைபெற்ற இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியின்போது காயமடைந்த தேவிந்தர் சிங், தோள்பட்டையில் கட்டுப்போட்ட நிலையிலேயே உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.
நீரஜ் ஏமாற்றம்: அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான நீரஜ் சோப்ரா தகுதிச் சுற்றோடு வெளியேறினார். இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு 83 மீ. தூரம் தகுதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நீரஜ் சோப்ராவால் அதிகபட்சமாக 82.26 மீ. தூரம் மட்டுமே ஈட்டி எறிய முடிந்தது. நீரஜ் சோப்ராவின் 'பெர்சனல் பெஸ்ட்' 86.48 மீ. தூரம் ஆகும். அதனால் அவர் எளிதாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தகுதிச்சுற்றோடு வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது.
தேவிந்தர் சிங்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறித்து தேவிந்தர் சிங் கூறியதாவது: நீரஜ் சோப்ராவால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போய்விட்டது. இதையடுத்து நான் இறுதிச்சுற்றுக்கு முன்னேற விரும்பினேன். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இதுவரை இந்தியர்கள் யாரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதால், நான் இறுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். கடவுளின் கிருபையால் இப்போது இறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட்டேன்.
கடந்த மே மாதம் தில்லியில் நடைபெற்ற இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் தோள்பட்டையில் கட்டுப் போட்டிருக்கிறேன். எனினும் அந்த காயம் எனக்கு ஒரு பிரச்னையாக இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com