நடாலை வீழ்த்திய மகிழ்ச்சியில் டெனிஸ் ஷபோவெலாவ்.
நடாலை வீழ்த்திய மகிழ்ச்சியில் டெனிஸ் ஷபோவெலாவ்.

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ்: நடால் அதிர்ச்சித் தோல்வி

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
கனடாவின் மான்ட்ரியால் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற 3-ஆவது சுற்றில் 18 வயதான கனடா வீரர் டெனிஸ் ஷபோவெலாவ் 3-6, 6-4, 7-6 (4) என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தினார்.
2 மணி, 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஷபோவெலாவ் 7 ஏஸ் சர்வீஸ்களை விளாசினார். இந்த ஆட்டத்தில் ஷபோவெலாவ் முதல் செட்டை இழந்ததால், நடால் நேர் செட்களில் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த இரு செட்களில் அபாரமாக ஆடி நடாலை சாய்த்தார் ஷபோவெலாவ். காலிறுதியில் பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவை சந்திக்கிறார் ஷபோவெலாவ்.
இந்தப் போட்டியில் நடால் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தால், சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருப்பார். ஆனால் இப்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு வெளியேறியதால் அந்த வாய்ப்பை இழந்தார்.
காலிறுதியில் ஃபெடரர்: மற்றொரு 3-ஆவது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
இதுவரை ஃபெரருடன் 18 முறை நேருக்கு நேர் மோதியிருக்கும் ஃபெடரர், 17-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இருவரும் மோதிய முதல் ஆட்டத்தில் ஃபெடரர் தோல்வியடைந்தார். அதன்பிறகு ஃபெடரர் தோற்றதில்லை.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஃபெடரர், தனது காலிறுதியில் மற்றொரு ஸ்பெயின் வீரரான பெளதிஸ்டா அகுட்டை சந்திக்கிறார். அகுட் தனது 3-ஆவது
சுற்றில் 4-6, 7-6 (5), 7-6 (2) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கேல் மான்பில்ஸை தோற்கடித்தார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். நெதர்லாந்தின் ராபின் ஹேஸி, தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் உள்ளிட்டோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com