தோனி இனி இஷ்டம்போல் விளையாடலாம்: மாஜி ஆஸி., மைக் ஹஸ்ஸி புகழாரம்

தோனி இனி இஷ்டம்போல் விளையாடலாம்: மாஜி ஆஸி., மைக் ஹஸ்ஸி புகழாரம்

மகேந்திர சிங் தோனி, இனிவரும் காலங்களில் தனது விருப்பத்தின் படி விளையாடலாம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் இடதுகை வீரரான மைக் ஹஸ்ஸி. இவரின் நேர்தியான ஆட்டம் காரணமாக மிஸ்டர் கிரிக்கெட் என்ற அடைமொழியும் உண்டு. ஐபிஎல் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணி குறித்து தனது பல்வேறு கருத்துக்களை அவர் சமீபத்தில் தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது:

உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா எப்போதுமே வலிமையாக விளங்குகிறது. இங்கு அதிகப்படியான வீரர்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிக்கின்றனர். மேலும், இங்கு கிரிக்கெட் விளையாட்டுக்கான அடிப்பைட கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளது. சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான் வீரர்கள் உடைய நாடு இது. 

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் எந்த தலைமுறை அணியாக இருந்தாலும் இந்தியா தான் அதற்கு சிறந்த சவாலை அளிக்கக்கூடியது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையே தலைமுறையாக ஆஷஸ் தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருந்தாலும், இந்திய மண்ணில் நாங்கள் பெரிய அளவில் சாதித்தது இல்லை. 

இங்கு உள்ள சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நேர்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் திணறுவோம். ஆனால், ஐபிஎல் போட்டிகள் வந்த பிறகு எங்கள் வீரர்கள் இங்கு திறம்பட விளையாட கற்றுக்கொண்டுள்ளனர். அதனால் அடுத்து வரும் போட்டித் தொடர்களில் நாங்கள் இந்திய அணிக்கு நிச்சயம் கடுமையான சவால் அளித்து வெற்றிபெறுவோம் என நம்புகிறேன். 

தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிகச்சிறப்பாக உள்ளது. வெற்றிபெற வேண்டும் என்ற ஒரோ நோக்கத்தில் விராட் கோலி செயல்படுது எனக்கு ரிக்கி பாண்டிங்கின் ஆட்டத்திறனை நினைவுபடுத்துகிறது. விராட் கோலி ஒருபோதும் தோனியை பின்பற்ற நினைத்தது கிடையாது. இதுவே அவருக்கு மிகப்பெரிய பலமாகும். 

ஐபிஎல் போட்டிகளின் மூலமாக இந்தியா, பல தலைசிறந்த இளம் வீரர்களை உருவாக்கி வருகிறது. அதிலும், டின்பிஎல் மூலமாக தமிழகம் தலைசிறந்த வீரர்களை உருவாக்குகிறது. குறிப்பாக வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்றவர்களின் ஆட்டம் சிறப்பாக அமைந்து வருகிறது. அவர்கள் மேலும் கூடுதல் கவனம் செலுத்தி தங்கள் ஆட்டத்தை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். 

மகேந்திர சிங் தோனி, தலைசிறந்த கேப்டன் மற்றும் வீரர். 36 வயதிலும் சிறந்த ஆட்டதிறன் மற்றும் உடல்திறன் பெற்று விளங்குகிறார். அவரைப் போன்ற சிறந்த கேப்டன் கிடைப்பது மிகவும் அரிதானது. எந்த நேரத்திலும் கலங்காத வீரர். கேப்டன் கூல் என்ற அடைமொழிக்கு ஏற்ப உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடியவர். தனது ஆட்டத்திறன் குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பவர். 

தனது வழியில் இந்திய அணியை வழிநடத்தியவர். அவருக்கு என்று தனி பாணியை உருவாக்கியவர். இவரது தலைமையிலான இந்திய அணி சிறந்து விளங்கியது என்பதில் சந்தேகமில்லை. இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளித்துள்ளார். அப்படி வந்தவர்கள் அனைவரும் இன்று ஒரு அணியாக உருவெடுத்து இருப்பது சிறப்புக்குரியதாகும். 

இந்திய அணிக்கு இது ஒரு சிறந்த காலகட்டமாகும். கேப்டன் முதல் வீரர்கள் வரை அனைவரும் ஒரே மன ஓட்டத்தில் செயல்படக்கூடியவர்கள். இதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் தோனி. எந்த நேரத்தில் ஓய்வு முடிவை அறிவிப்பது என்பது தோனிக்கு நன்கு தெரியும். அவருக்கு அறிவுரை கூற யாரும் தேவையில்லை. 

அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடுவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். தன்னடக்கம் மற்றும் நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு தோனி. அடுத்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் தன்னுடைய பங்களிப்பை அளிக்க முடியவில்லை என்றால் தோனியே விலகிவிடுவார். 

அவரது குணம் அதுபோன்றது. தோனியைப் பொறுத்தவரையில் அணியின் வெற்றிதான் முக்கியம். மொத்தத்தில் தன்னை நன்கு அறிந்து வைத்திருப்பவர் தோனி. எனவே முடிவை அவரிடமே விட்டுவிடலாம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com