பல்லகெலே டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா-329/6

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்துள்ளது.
பல்லகெலே டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா-329/6

இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்துள்ளது.

ஷிகர் தவன் (119)-கே.எல்.ராகுல் (85) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 39.3 ஓவர்களில் 188 ரன்கள் குவித்தபோதும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக நடையைக் கட்டியதால் இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது.
இலங்கையின் பல்லகெலேவில் சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் கோலி ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்திருந்தார். அதாவது, 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.
முதல் விக்கெட்டுக்கு 188: இதில் டாஸ் வென்ற கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஷிகர் தவனும், கே.எல்.ராகுலும் இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்கினர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அசத்தலாக ஆட, 17.4 ஓவர்களில் 107 ரன்களை எட்டியது இந்தியா.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஷிகர் தவன் 45 பந்துகளில் அரை சதம் கண்டார். அவரைத் தொடர்ந்து ராகுல் 67 பந்துகளில் அரை சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் தொடர்ச்சியாக விளாசிய 7-ஆவது அரை சதமாகும்.
மதிய உணவு இடைவேளையின்போது 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. உணவு இடைவேளைக்குப் பிறகு தவனும், ராகுலும் சிறப்பாக ஆட, இந்தியா 30.4 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி, இந்தியா 39.3 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. ராகுல் 135 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் சேர்த்த நிலையில் புஷ்பகுமாரா பந்துவீச்சில் கருணாரத்னேவிடம் கேட்ச் ஆனார்.
தவன் 6-ஆவது சதம்: இதையடுத்து புஜாரா களமிறங்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய தவன் 107 பந்துகளில் சதமடித்தார். இது, டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 6-ஆவது சதமாகும். அதேநேரத்தில் இந்தத் தொடரில் அவர் அடித்த 2-ஆவது சதமாகும்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய தவன், இந்தியா 47.1 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் 123 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் குவித்து புஷ்பகுமாரா பந்துவீச்சில் தினேஷ் சன்டிமலிடம் கேட்ச் ஆனார்.
சரிவுக்குள்ளான இந்தியா:
இதையடுத்து கேப்டன் கோலி களமிறங்க, புஜாரா 33 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் சன்டாகன் பந்துவீச்சில் மேத்யூஸிடம் கேட்ச் ஆனார்.
இதன்பிறகு இந்தியா சரிவுக்குள்ளானது. பின்னர் களமிறங்கிய அஜிங்க்ய ரஹானே 48 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் புஷ்பகுமாரா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து அஸ்வின் களமிறங்க, மறுமுனையில் தடுப்பாட்டம் ஆடிய கேப்டன் கோலி 84 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் கருணாரத்னேவிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு ரித்திமான் சாஹா களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய அஸ்வின் 71 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சாஹாவுடன் ஜோடி சேர்ந்தார் ஹார்திக் பாண்டியா. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்துள்ளது. புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளையும், சன்டாகன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

துளிகள்...

7

டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 7 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார் கே.எல்.ராகுல். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக அதிக முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்தவர்களான எவர்டான் வீக்ஸ், ஆன்டி ஃபிளவர், சந்தர்பால், குமார் சங்ககாரா, கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார் கே.எல்.ராகுல்.

6

இந்தத் தொடரில் ஷிகர் தவன் இரு சதங்களை விளாசியுள்ளார். இதன்மூலம் கடந்த 6 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் ஒரு டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட சதங்களை விளாசிய இந்தியாவின் ஒரே தொடக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தவன். இதற்கு முன்னர் 2011-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற பட்டோடி டிராபி தொடரில் ராகுல் திராவிட் இரு சதங்களை விளாசியிருந்தார். இந்த சாதனையை கவாஸ்கர் 5 முறையும், திராவிட் இரு முறையும் செய்துள்ளனர்.

141

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 141 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. ராகுல்-தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்த நிலையில், பின்னர் வந்த யாரும் அரை சதமடிக்கவில்லை. வேறு எந்த ஜோடியும் ஒரு விக்கெட்டுக்கு 40 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை.

188

இந்தப் போட்டியில் 188 ரன்கள் குவித்ததன் மூலம் இலங்கை மண்ணில் இலங்கைக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு ஜோடி என்ற பெருமை இந்தியாவின் ஷிகர் தவன்- கே.எல்.ராகுல் ஜோடிக்கு கிடைத்துள்ளது. முன்னதாக 1993-இல் இந்தியாவின் மனோஜ் பிரபாகர்-நவ்ஜோத் சிங் சித்து ஜோடி முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

ஸ்கோர் போர்டு

இந்தியா


ஷிகர் தவன் (சி) சன்டிமல் (பி) புஷ்பகுமாரா 119 123
கே.எல்.ராகுல் (சி) கருணாரத்னே (பி) புஷ்பகுமாரா 85 135
சேதேஷ்வர் புஜாரா (சி) மேத்யூஸ் (பி) சன்டாகன் 8 33
விராட் கோலி (சி) கருணாரத்னே (பி) சன்டாகன் 42 84
அஜிங்கய் ரஹானே (பி) புஷ்பகுமாரா 17 48
அஸ்வின் (சி) டிக்வெல்லா (பி) பெர்னாண்டோ 31 75
ரித்திமான் சாஹா நாட் அவுட் 13 38
ஹார்திக் பாண்டியா நாட் அவுட் 1 6
உதிரிகள் 13
மொத்தம் (90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 329

விக்கெட் வீழ்ச்சி: 1-188 (ராகுல்), 2-219 (தவன்), 3-229 (புஜாரா), 4-264 (ரஹானே), 5-296 (கோலி), 6-322 (அஸ்வின்)

பந்துவீச்சு: விஸ்வா பெர்னாண்டோ 19-2-68-1,
லஹிரு குமாரா 15-1-67-0, கருணாரத்னே 5-0-23-0,
தில்ருவான் பெரேரா 8-1-36-0, லக்ஷன் சன்டாகன் 25-2-84-2,
புஷ்பகுமாரா 18-2-40-3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com