3-0: இந்திய அணி வரலாற்றுச் சாதனை!

85 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எந்த அணியையும்...
3-0: இந்திய அணி வரலாற்றுச் சாதனை!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி பெற்றுள்ளது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.

இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்தது இந்திய அணி. ஷிகர் தவன் 119, பாண்டியா 108, ராகுல் 85 ரன்கள் குவிக்க, 114.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 37.4 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து பாலோ-ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்தது. 

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை
இன்னும் 333 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கியது. நேற்று மாலை வேளையில் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின், கருணாரத்னேவை 16 ரன்களில் வெளியேற்றினார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாகப் பந்துவீசிய சமி, இந்தமுறையும் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். புஷ்பகுமாரா 1 ரன்னிலும் மெண்டிஸ் 12 ரன்களிலும் சமியின் பந்துவீச்சால் வெளியேறினார்கள். இதனால் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தவித்தது.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த சன்டிமல் - மேத்யூஸ், கவனமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். மதிய உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 42 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்தது. அந்த அணி 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 270 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 3-0 எனத் தொடரை வெல்வது ஏறக்குறைய உறுதியானது. இலங்கை அணி சொந்த மண்ணில் 'ஒயிட் வாஷ்' தோல்வியைத் தவிர்க்கப் போராடினாலும் அந்த அணி தற்போது பலவீனமாக இருப்பதால், இந்தியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதாக அமையவில்லை.

இதன்பிறகு சன்டிமல் 36 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி பெறுவது உறுதியானது. அடுத்தச் சில ஓவர்களில் மேத்யூஸ் 35 ரன்களில் அஸ்வினிடம் வீழ்ந்தார். இதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. பெரேரா 8 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சன்டகனும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அவருடைய விக்கெட்டை சமி எடுத்தார். ஓரளவு தாக்குப்பிடித்த டிக்வெல்லா 41 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்காக இன்றைய நாளின் இரண்டாம் பகுதி நீட்டிக்கப்பட்டது. கடைசியில் 10 ரன்கள் எடுத்திருந்த குமாராவின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி அடைந்துள்ளது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முதல் இரு போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, 3-ஆவது டெஸ்டிலும் வென்று இலங்கையை 'ஒயிட் வாஷ்' ஆக்கியுள்ளது. வெளிநாட்டு மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் எதிரணியை 'ஒயிட் வாஷ்' ஆக்கிய முதல் இந்திய அணி என்ற பெருமை கோலி படைத்துள்ளார். 85 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எந்த அணியையும் 'ஒயிட் வாஷ்' ஆக்கியதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com