ஐரோப்பிய ஹாக்கி தொடர்: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

ஐரோப்பிய ஹாக்கி தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
நெதர்லாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி அணியினர்.
நெதர்லாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி அணியினர்.

ஐரோப்பிய ஹாக்கி தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதலில் பெல்ஜியத்துடன் இரு ஆட்டங்களில் விளையாடியது.
அதைத் தொடர்ந்து நெதர்லாந்துக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்ட இந்திய அணி, திங்கள்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் நெதர்லாந்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் 4-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இந்தியாவின் குர்ஜந்த் கோலடிக்க, 51-ஆவது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பில் மன்தீப் சிங் கோலடித்தார். இதனால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதேநேரத்தில் மறுமுனையில் கோலடிப்பதற்காக தொடர்ந்து போராடிய நெதர்லாந்து அணி 58-ஆவது நிமிடத்தில் கோலடித்தது. ஆனால் அது ஆறுதல் கோலாக மட்டுமே அமைந்தது. மாறாக தோல்வியிலிருந்து அந்த அணியால் தப்ப முடியவில்லை. இறுதியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியில் 9 ஜூனியர்கள் இடம்பெற்றுள்ளனர். ஜூனியர் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி, உலகின் 4-ஆம் நிலை அணியான நெதர்லாந்தை வீழ்த்தியிருக்கிறது.
வெற்றி குறித்துப் பேசிய இந்திய கேப்டன் மன்பிரீத் சிங், 'இந்திய வீரர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். அதனாலேயே இந்தியாவால் நெதர்லாந்தை வீழ்த்த முடிந்தது. நெதர்லாந்து அணி மிகுந்த அனுபவம் வாய்ந்த அணி. அதில் இடம்பெற்றுள்ள 8 வீரர்கள் 100-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதனால் அவர்களை வீழ்த்துவதற்கு சரியான திட்டங்களோடு களமிறங்கினோம்.
இந்திய அணியில் சிலர் அறிமுகப் போட்டியில் ஆடினார்கள். எனினும் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் வீரர்கள் யாரும் பதற்றப்படவில்லை. அதேநேரத்தில் மிகுந்த நம்பிக்கையோடு ஆடினார்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com