சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: காலிறுதியில் டிமிட்ரோவ், இஸ்னர், ஹேலப், முகுருஸா

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ருமேனியாவின் சைமோனா ஹேலப், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா
காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ஜான் இஸ்னர்.
காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ஜான் இஸ்னர்.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ருமேனியாவின் சைமோனா ஹேலப், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை தோற்கடித்தார்.
கிரிகோர் தனது காலிறுதியில் ஜப்பானின் யூச்சி சுகிதாவை சந்திக்கிறார். முன்னதாக சுகிதா தனது 3-ஆவது சுற்றில் 6-7 (0), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் கரீன் கச்சனோவை தோற்கடித்தார்.
ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்ததாக ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை சந்திக்கிறார் டேவிட் ஃபெரர்.
டொமினிக் தீம் தனது 3-ஆவது சுற்றில் 7-6 (4), 7-6 (3) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவை தோற்கடித்தார்.
அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 7-6 (4), 7-5 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான பிரான்செஸ் டியாஃபோவை வீழ்த்தினார். காலிறுதியில் அமெரிக்காவின் ஜேர்டு டொனால்டுசன்னை சந்திக்கிறார் இஸ்னர்.
முன்னதாக டொனால்டுசன் தனது 3-ஆவது சுற்றில் 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் ஜார்ஜியாவின் நிகோலஸை தோற்கடித்தார். ஸ்பெயின் வீரர்களான ரஃபேல் நடால்-ஆல்பர்ட் ரேமோஸ் இடையிலான ஆட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
சைமோனா, முகுருஸா வெற்றி: மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் லாத்வியாவின் அனாஸ்டாஜியாவை வீழ்த்தினார். ஹேலப் தனது காலிறுதியில் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டாவுடன் மோதுகிறார். கோன்டா தனது முந்தைய சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவை தோற்கடித்தார்.
ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் சுவாரெஸ் நவரோவாவை தோற்கடித்தார். காலிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவுடன் மோதுகிறார் ஸ்வெட்லானா. போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் முகுருஸா தனது 3-ஆவது சுற்றில் 6-4, 3-6, 7-6 (3) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்ட்டியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா-இத்தாலியின் கேமிலா ஜியார்ஜி இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது பிளிஸ்கோவா 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.

இரட்டையர் பிரிவு: காலிறுதியில் போபண்ணா ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-
குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 5-7, 7-5, 10-8 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன்-இத்தாலியின் பாபியோ பாக்னினி ஜோடியைத் தோற்கடித்தது.
போபண்ணா ஜோடி தங்களின் காலிறுதியில் போலந்தின் லூகாஸ் குபோட்-பிரேசிலின் மார்செலோ மெலோ ஜோடியை எதிர்கொள்கிறது.
அரையிறுதியில் சானியா ஜோடி
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-சீனாவின் பெங் ஷுவாய் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 6-3, 6-7 (1), 10-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் ஐரினா கேமிலியா-ராலுகா ஒலாரு ஜோடியைத் தோற்கடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com