இந்தியா-இலங்கை முதல் ஒரு நாள் ஆட்டம்

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இலங்கையின் தம்புல்லா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா-இலங்கை முதல் ஒரு நாள் ஆட்டம்

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இலங்கையின் தம்புல்லா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஒரு நாள் தொடரிலும் அந்த அணியை "ஒயிட் வாஷ்' ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.
ஆனால் இலங்கை அணியோ, டெஸ்ட் தொடரில் கண்ட படுதோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுதவிர 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடித் தகுதி பெறுவதற்கு இந்தத் தொடரில் குறைந்தபட்சம் இரண்டு ஆட்டங்களிலாவது வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியும் இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.
வலுவான பேட்டிங்: இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியிருக்கிறார். அவரும், ஷிகர் தவனும் இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்கவுள்ளனர். ரோஹித் சர்மா வருகையால், அஜிங்க்ய ரஹானே ஆடும் லெவனில் தனது இடத்தை இழந்துள்ளார். அவர், மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் சிறப்பாக ஆடி ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது.
கே.எல்.ராகுல் 4-ஆவது வீரராக களமிறங்கவுள்ளார். அதனால் மணீஷ் பாண்டே வெளியில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, ராகுல், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், ஹார்திக் பண்டியா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் களத்தில் நின்றாலும், இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்க முடியும்.
வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், பாண்டியா கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் கூட்டணி அசத்த காத்திருக்கிறது. 2019 உலகக் கோப்பை போட்டிக்கான வீரர்களை அடையாளம் காண்பதில் இந்திய தேர்வுக் குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதனால் அனைத்து வீரர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆட முயற்சிப்பார்கள்.
தடுமாறும் இலங்கை: இலங்கை அணி புதிய கேப்டனான உபுல் தரங்கா தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியில் நிரோஷன் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா, குஷல் மென்டிஸ், உபுல் தரங்கா, மேத்யூஸ், கபுகேதரா, திசாரா பெரேரா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
ஆனால் இவர்களில் யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடரில் தடுமாறிய உபுல் தரங்கா ஒரு நாள் தொடரில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.
வேகப்பந்து வீச்சில் லசித் மலிங்கா, சமீரா கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அகிலா தனஞ்ஜெயா, வனிந்து ஹசரங்கா கூட்டணியையும் நம்பியுள்ளது இலங்கை. இந்தியாவும், இலங்கையும் கடைசியாக மோதிய 18 போட்டிகளில் 14-இல் இந்தியா வென்றுள்ளது.


மைதானம் எப்படி?


போட்டி நடைபெறும் தம்புல்லா ஆடுகளத்தில் 300 ரன்கள் குவித்தால், அது மிக வலுவான ஸ்கோராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்ய வாய்ப்பில்லை. 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா (உத்தேச லெவன்)ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ்,
ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ்.

இலங்கை (உத்தேச லெவன்) நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தனுஷ்கா குணதிலகா, குஷல் மென்டிஸ், உபுல் தரங்கா (கேப்டன்), ஏஞ்செலோ மேத்யூஸ், சமரா கபுகேதரா, வனிந்து ஹசரங்கா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்ஜெயா, லசித் மலிங்கா, துஷ்மந்தா சமீரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com