டிஎன்பிஎல்: மகுடம் சூடுவது யார்? சூப்பர் கில்லீஸ்-தூத்துக்குடி இன்று பலப்பரீட்சை

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், கடந்த முறை இறுதிச் சுற்று வரை முன்னேறிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதுகின்றன.
தூத்துக்குடி அணி தொடர்ந்து 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளது. இந்த சீசனில் அனைத்து (7) லீக் ஆட்டங்களிலும் வெற்றி கண்ட தூத்துக்குடி அணி, முதல் தகுதிச் சுற்றில் சூப்பர் கில்லீஸ் அணியை வென்றுதான் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
எனவே இந்த ஆட்டத்திலும் அந்த அணியின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி அணியின் மிகப்பெரிய பலம் வாஷிங்டன் சுந்தர்தான். அவர், பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். இதுவரை 445 ரன்கள் குவித்துள்ள சுந்தர், இந்த சீசனில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுதவிர 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
சூப்பர் கில்லீஸூக்கு எதிராகவும் அவர் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் கலக்கக் காத்திருக்கிறார். இதேபோல் கெளஷிக் காந்தி, கேப்டன் தினேஷ் கார்த்திக், அபிநவ் முகுந்த் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அதிசயராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த சீசனில் இதுவரை அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சுழற்பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர் காந்தி, கணேஷ் மூர்த்தி, அஸ்வின் கிறிஸ்து ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
சூப்பர் கில்லீஸ் அணி, லீக் சுற்றில் 6 ஆட்டங்களில் வெற்றி கண்ட நிலையில், 2-ஆவது தகுதிச் சுற்றில் பலம் வாய்ந்த கோவை அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. கோபிநாத், சற்குணம், அந்தோணி தாஸ், எஸ்.கார்த்தி ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சாய் கிஷோர், அலெக்சாண்டர் ஆகியோரை நம்பியுள்ளது சூப்பர் கில்லீஸ். சாய் கிஷோர் 15 விக்கெட்டுகளுடன் இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
ரூ.1 கோடி பரிசு: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளன.
மிரட்டும் மழை: சென்னையில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com