ஷிகர் தவன் சதம்: இந்தியா அபார வெற்றி

ஷிகர் தவன் சதம்: இந்தியா அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.
இந்த ஆட்டத்தில் இந்தியா 127 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது. 200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை குறைந்த ஓவர்களில் இந்தியா எட்டிய ஆட்டம் இதுதான்.
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் 90 பந்துகளில் 3 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 132 ரன்களும், கேப்டன் விராட் கோலி 70 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்தது.
இலங்கையின் தம்புல்லா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக யுவேந்திர சாஹலுடன் களமிறங்கியது இந்தியா.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்ய, இலங்கையின் இன்னிங்ûஸ டிக்வெல்லாவும், குணதிலகாவும் தொடங்கினர். முதல் 5 ஓவர்கள் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, அடுத்த 5 ஓவர்களில் சற்று வேகமாக ரன் சேர்க்க, 10 ஓவர்களில் 55 ரன்களை எட்டியது இலங்கை.
டிக்வெல்லா அரை சதம்: தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி, இலங்கை அணி 14 ஓவர்களில் 74 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. 44 பந்துகளைச் சந்தித்த குணதிலகா 35 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து டிக்வெல்லாவுடன் இணைந்தார் குஷல் மென்டிஸ். இந்த ஜோடி சிறப்பாக ஆட, 18.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இலங்கை. தொடர்ந்து அசத்தலாக ஆடிய டிக்வெல்லா 65 பந்துகளில் அரை சதமடித்தார். இலங்கை அணி 24.3 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்வெல்லா ஆட்டமிழந்தார். அவர் 74 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்து கேதார் ஜாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன்பிறகு இலங்கையின் சரிவு தவிர்க்க முடியாததானது. குஷல் மென்டிஸ் 37 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து வெளியேற, கேப்டன் உபுல் தரங்கா 13 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து கபுகதேரா 1 ரன் எடுத்த நிலையில் கோலியின் துல்லிய "த்ரோ'வில் ரன் அவுட்டானார்.
இதன்பிறகு டி சில்வா 2, திசாரா பெரேரா 0, சன்டாகன் 5, மலிங்கா 8 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டான விஸ்வா பெர்னாண்டோ டக் அவுட்டானார். இதனால் இலங்கை அணி 43.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு சுருண்டது. மேத்யூஸ் 50 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை அணி 77 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது
இந்தியத் தரப்பில் அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பூம்ரா, யுவேந்திர சாஹல், கேதார் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
ஷிகர் தவன் சதம்: பின்னர் ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவன் அதிரடியாக ஆட, ரோஹித் சர்மா 4 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இதையடுத்து தவனுடன் இணைந்தார் கேப்டன் விராட் கோலி.
இந்த ஜோடி அதிரடியாக ஆட, 10 ஓவர்களில் 64 ரன்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து வேகம் காட்டிய தவன், சன்டாகன் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 36 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் 15-ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது இந்தியா.
தொடர்ந்து வேகமாக ரன் சேர்த்த தவன், 87 ரன்கள் எடுத்திருந்தபோது பெர்னாண்டோ பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் டிக்வெல்லா கோட்டைவிட்டதால் ஆட்டமிழப்பதிலிருந்து தப்பினார்.
இதன்பிறகு டிசில்வா வீசிய 22-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டிய தவன், 71 பந்துகளில் சதம் கண்டார். இது அவருடைய 11-ஆவது சதமாகும். இதுதவிர இலங்கை மண்ணில் இலங்கைக்கு எதிராக அதிவேக சதமடித்த இந்தியர் என்ற பெருமையும் தவன் வசமானது.
அவரைத் தொடர்ந்து விராட் கோலி 50 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு தவனும், கோலியும் இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடிக்க, இந்தியாவின் வெற்றி எளிதானது. டி சில்வா பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி ஆட்டத்தை வெற்றியில் முடித்தார் தவன். இந்தியா 28.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஷிகர் தவன் 90 பந்துகளில் 132, கோலி 70 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷிகர் தவன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை பல்லகெலேவில் நடைபெறுகிறது.


ஸ்கோர் போர்டு

இலங்கை

டிக்வெல்லா எல்பிடபிள்யூ (பி) ஜாதவ் 64 74
குணதிலகா (சி) ராகுல் (பி) சாஹல் 35 44
குஷல் மென்டிஸ் (பி) அக்ஷர் 36 37
உபுல் தரங்கா (சி) தவன் (பி) ஜாதவ் 13 23
ஏஞ்செலோ மேத்யூஸ் நாட் அவுட் 36 50
கபுகேதரா ரன் அவுட் (கோலி) 1 2
டி சில்வா (சி) ஜாதவ் (பி) அக்ஷர் 2 5
திசாரா பெரேரா (பி) பூம்ரா 0 5
சன்டாகன் எல்பிடபிள்யூ (பி) அக்ஷர் 5 8
லசித் மலிங்கா (ஸ்டெம்பிங்) தோனி (பி) சாஹல் 8 6
விஸ்வா பெர்னாண்டோ (பி) பூம்ரா 0 6
உதிரிகள் 16
மொத்தம் (43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 216

விக்கெட் வீழ்ச்சி: 1-74 (குணதிலகா), 2-139 (டிக்வெல்லா),
3-150 (மென்டிஸ்), 4-166 (தரங்கா), 5-169 (கபுகேதரா),
6-176 (டி சில்வா), 7-178 (பெரேரா), 8-187 (சன்டாகன்),
9-209 (மலிங்கா), 10-216 (பெர்னாண்டோ).

பந்துவீச்சு: புவனேஸ்வர் குமார் 6-0-33-0, பாண்டியா 6-0-35-0,
ஜஸ்பிரித் பூம்ரா 6.2-0-22-2, யுவேந்திர சாஹல் 10-0-60-2,
கேதார் ஜாதவ் 5-0-26-2, அக்ஷர் படேல் 10-0-34-3.


இந்தியா

ரோஹித் சர்மா ரன் அவுட் (கபுகேதரா) 4 13
ஷிகர் தவன் நாட் அவுட் 132 90
விராட் கோலி நாட் அவுட் 82 70
உதிரிகள் 2
மொத்தம் (28.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு) 220

விக்கெட் வீழ்ச்சி: 1-23 (ரோஹித் சர்மா)

பந்துவீச்சு: லசித் மலிங்கா 8-0-52-0, பெர்னாண்டோ 6-0-43-0,
ஏஞ்செலோ மேத்யூஸ் 2-0-9-0, திசாரா பெரேரா 2-0-18-0,
சன்டாகன் 6-0-63-0, டி சில்வா 4.5 - 0 - 35 -0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com