உலக திறனாய்வு போட்டி முறையாக நடைபெறாததால் 2-ஆவது ஆண்டாக நிரம்பாத விளையாட்டு விடுதிகள்!

உலக திறனாய்வு திட்ட விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடைபெறாதது, பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாதது போன்ற காரணங்களால் 2-ஆவது ஆண்டாக தமிழக விளையாட்டு விடுதிகள்
உலக திறனாய்வு போட்டி முறையாக நடைபெறாததால் 2-ஆவது ஆண்டாக நிரம்பாத விளையாட்டு விடுதிகள்!

உலக திறனாய்வு திட்ட விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடைபெறாதது, பயிற்சியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாதது போன்ற காரணங்களால் 2-ஆவது ஆண்டாக தமிழக விளையாட்டு விடுதிகள் நிரம்பவில்லை என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பள்ளி மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கான 30 விளையாட்டு விடுதிகள் (மாணவர்களுக்கு 18, மாணவிகளுக்கு 12) செயல்பட்டு வருகின்றன. இந்த மாணவர்களுக்கு, தடகளம், கால்பந்து, நீச்சல், ஹாக்கி, வாலிபால், குத்துச்சண்டை, கூடைப்பந்து, கிரிக்கெட், வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், கபடி, ஹேண்ட்பால், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
விளையாட்டில் ஆர்வம் உள்ள 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் சுமார் 2ஆயிரம் பேரைத் தேர்வு செய்து, இந்த விடுதிகளில் தங்க வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இப்போது ஒவ்வொரு விளையாட்டு விடுதியிலும் 5 முதல் 7 இடங்கள் வரை காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. நிகழாண்டில் 3 முறை வீரர்கள் தேர்வு முகாம் நடத்தப்பட்டபோதிலும், தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் ஒட்டுமொத்தமாக 160-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) அலுவலர் ஒருவர் கூறியது: விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே விடுதிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விதிமுறை கடந்த 2 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், சீருடை, பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.90 ஆயிரம் வீதம் செலவிடப்படுகிறது.
திறமையான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அந்த அடிப்படையிலேயே, தகுதியான மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே, கடந்த ஆண்டும், நடப்பாண்டிலும் விளையாட்டு விடுதியில் காலி இடங்கள் உள்ளன. அதே நேரத்தில் விளையாட்டு விடுதிகளில் பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாலும், சிறப்பாக விளையாடும் மாணவர்கள் விடுதியில் சேர முன்வருவதில்லை என்றார்.
பயனளிக்காத உலக திறனாய்வு திட்ட விளையாட்டு: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி 50 மீ. ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுல், 600 மீ. ஓட்டம் ஆகிய போட்டிகளை அந்தந்த பள்ளி அளவில் நடத்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
அதன்பின்னர் பள்ளி வாரியாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, 100 மீ., 200 மீ. மற்றும் 400 மீ. ஓட்டங்கள், குண்டு எறிதல், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. கல்வி மாவட்டத்திற்கு தலா 72 பேர் வீதம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மண்டல அளவிலான போட்டிக்கு அரசின் செலவில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மண்டல அளவில் முதல் 10 இடங்களைப் பெறும் மாணவர்கள் 360 பேருக்கு ரூ.6000-க்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இதில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள், நுழைவுத் தேர்வு மூலம் தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்படுகின்றனர். அதேபோல் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு அகாதெமி மூலம் கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதுபோன்ற வாய்ப்புகள் இருக்கும் நிலையில், பள்ளிகளில் மைதானம் இல்லாதது, உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாதது போன்ற காரணங்களால், பெரும்பாலான பள்ளிகளில் உலக திறனாய்வு போட்டிகள் நடைபெறுவதில்லை. சில பள்ளிகளில் பெயரளவுக்கு போட்டிகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். இதனால் அந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களால் கல்வி மாவட்ட நிலையை கடந்து முன்னேற முடிவதில்லை.
இதனால், விளையாட்டு விடுதிகளுக்குத் தகுதியான மாணவர்களைச் சேர்க்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலைக்கு பெரும்பாலான பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்காததே முக்கிய காரணம் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com