தோல்வியிலிருந்து தப்பிய இந்தியா: பேட்டிங்கில் சாதனை படைத்த புவனேஸ்வர் குமார்!

புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவினார்....
தோல்வியிலிருந்து தப்பிய இந்தியா: பேட்டிங்கில் சாதனை படைத்த புவனேஸ்வர் குமார்!

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. ஒரு கட்டத்தில் இந்திய அணி 21.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவனேஸ்குமாரும் அபாரமாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. இதுதான் 8-ஆவது விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த அதிகபட்ச ரன். புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53, தோனி 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கையின் பல்லகெலே நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா 4 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியா பேட் செய்வதற்கு முன்பு மழை பெய்தது. இதன்காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு 47 ஓவர்களில் 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. இந்தியா 44.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. புவனேஸ்வர் குமார் 53, தோனி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கைத் தரப்பில் தனஞ்ஜெயா 10 ஓவர்களில் 54 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

புவனேஸ்வர் குமார் இந்தப் போட்டியில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி, தோனிக்கு நல்ல இணையாக அமைந்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார். இலக்கை வெற்றிகரமாக அடைந்த போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 9-வது நிலை வீரர்களில் புவனேஸ்வர் குமார் 3-ம் இடம் பிடித்துள்ளார். 

வெற்றிகரமான சேஸிங்குகளில் அதிக ரன்கள் எடுத்த 9-ம் நிலை வீரர்கள்

2014 ஜேம்ஸ் ஃபாக்னர் vs இங்கிலாந்து: 69*
2007 தாமஸ் ஒடோயோ vs அயர்லாந்து 61*
2017 புவனேஸ்வர் குமார் vs இலங்கை 53*

* தோனியும், புவனேஸ்குமாரும் அபாரமாக ஆடி 100 ரன்கள் சேர்த்தார்கள். இதுதான் 8-ஆவது விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த அதிகபட்ச ரன். வெற்றிகரமான சேஸிங்குகளில் 8-ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்ததும் இவர்கள்தான். இதற்கு முன்பு வெற்றிகரமான சேஸிங்குகளில் 8-ஆவது விக்கெட்டுக்கு இங்கிலாந்தின் பொபாராவும் பிராடும் இந்தியாவுக்கு எதிராக 99* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை பல்லகெலேவில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com