3-வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி உண்மையிலேயே இந்திய அணியை மிரட்டிவிட்டது...
3-வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?

டெஸ்ட் தொடரில் 3-0 என வெற்றி கண்ட இந்திய அணி ஒருநாள் தொடரிலும் 5-0 என வெற்றி காணுமா? அதற்கு நாளை நடைபெறவுள்ள போட்டி உதவியாக இருக்குமா? கோலி படையின் ஆதிக்கத்தை இலங்கை அணியால் தடுத்து நிறுத்த முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று விடை சொல்லவே இந்திய ரசிகர்கள் விரும்புவார்கள். நிலைமையும் இந்திய அணிக்குச் சாதகமாகவே உள்ளது. ஆனால் 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி உண்மையிலேயே இந்திய அணியை மிரட்டிவிட்டது. தோனி மற்றும் புவனேஸ்வர் குமாரின் சாதுரியத்தால் இந்திய அணி தோல்வியிலிருந்து தப்பியது.

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. ஒரு கட்டத்தில் இந்திய அணி 21.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவனேஸ்குமாரும் அபாரமாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. இதுதான் 8-ஆவது விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த அதிகபட்ச ரன். புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53, தோனி 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஒரு நாள் போட்டியில் முதல்முறையாக அரை சதமடித்துள்ளார் புவனேஸ்வர் குமார். கடந்த 8 ஆண்டுகளில் ஒரு நாள் போட்டியில் 9-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அரை சதமடித்த முதல் இந்தியர் புவனேஸ்வர் குமார்தான். அது குறித்துப் பேசிய அவர், 'ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அரை சதமடிப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஒரு நாள் போட்டி எனது பேட்டிங்கிற்கு ஏற்றதல்ல. ஏனெனில் நான் பிரமாண்ட சிக்ஸர்களை விளாசக்கூடிய பேட்ஸ்மேன் அல்ல. ஆனால் இப்போது அரை சதமடித்ததோடு, போட்டியையும் வென்று தந்திருக்கிறேன்' என்றார்.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது ஆட்டம் வரும் பல்லகெலேவில் நாளை நடைபெறுகிறது.

முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்திய அணி, இந்த ஆட்டத்தில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறது. ஆனால், இலங்கை அணியோ தொடர் தோல்வியின் காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. முதல் ஆட்டத்தில் தோற்ற பிறகு இலங்கை அணியினர் ஹோட்டலுக்கு திரும்பும் வழியில், அந்நாட்டு ரசிகர்கள் அவர்களுடைய பேருந்தை மறித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதவிர பயிற்சியாளர் மற்றும் மேலாளர் இடையிலான மோதல் காரணமாக அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது இலங்கை அணி. 

இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. தொடக்க வீரர் ஷிகர் தவன் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார். மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா, தனது பழைய ஆட்டத்தை மீட்டுள்ளார். 2-வது ஒருநாள் போட்டிக்கு முன்பு ரோஹித் சர்மா, இலங்கையில் கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில் அவர் 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் கடந்த ஆட்டத்தில் அரை சதம் எடுத்து இலங்கையில் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். கடந்த போட்டியில் பெரிதாக ரன்கள் எடுக்காவிட்டாலும் மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், பாண்டியா கூட்டணி பலம் சேர்க்கிறது. வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், பாண்டியா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பலம் சேர்க்கிறது. பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கேதார் ஜாதவும் சிறப்பாக செயல்பட்டு வருவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.

பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ததில் எந்த வருத்தமும் இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஆட்டத்தில் கோலி இடத்தில் கேதார் ஜாதவ் களமிறக்கப்பட்டார். கோலி 5-ஆவது வீரராக களமிறங்கினார். ஜாதவ், ராகுல், கோலி ஆகியோர் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா கடும் சரிவுக்குள்ளானது. இது தொடர்பாக கோலி கூறியதாவது: வெற்றி இலக்கு 231 ரன்கள்தான். ஒரு கட்டத்தில் நாங்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தோம். அதனால் எளிதாக வெற்றி பெற முடியும் என நினைத்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தேன். அதில் எந்த வருத்தமும் இல்லை. நானே 3-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கியிருந்தால்கூட, நிச்சயம் அந்த பந்தில் போல்டாகியிருப்பேன். ஏனெனில் தனஞ்ஜெயா சிறப்பாக பந்துவீசினார் என்றார்.

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக இலங்கை கேப்டன் உபுல் தரங்காவுக்கு இரு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவுக்கு எதிரான அடுத்த இரு போட்டிகளில் இலங்கை அணியின் கேப்டனாக கபுகேதரா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லகெலேவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. இதில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில் இலங்கை அணி 3 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது. இதையடுத்து உபுல் தரங்காவுக்கு இரு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடைசி 3 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தினேஷ் சன்டிமல் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் குணதிலகாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அடுத்த இரு ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதிலாக லஹிரு திரிமானி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது மனநிறைவு அளிக்கிறது. எனினும் அதில் வென்றிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயா தெரிவித்தார். ஒரே ஓவரில் கேதார் ஜாதவ், கோலி, ராகுல் ஆகியோரை வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்த தனஞ்ஜெயா ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். அதன்பிறகு அவர் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முடியாமல் போனது வருத்தமாக இருந்தது. அந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன். இந்தியாவுக்கு எதிராக என்னுடைய ஆப் ஸ்பின் எடுபடாததை உணர்ந்தபோது, லெக் ஸ்பின் மற்றும் கூக்ளியை வீசுவது என்று முடிவு செய்தேன். எங்களுடைய இலக்கு தற்காப்பு ஆட்டம் அல்ல. அதனால்தான் பல்வேறு வகையான பந்துவீச்சை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தமுடிந்தது என்றார்.

இலங்கை பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நிரோஷன் டிக்வெல்லா, குஷல் மென்டிஸ் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். மிடில் ஆர்டரில் மேத்யூஸ், கபுகேதரா, சிறிவர்த்தனா போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், அவர்கள் யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது கவலையளிக்கிறது. வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மலிங்கா, விஸ்வா பெர்னாண்டோ ஆகியோரையே நம்பியுள்ளது இலங்கை. இவர்களால் இந்திய பேட்ஸ்மேன்களிடம் நெருக்கடி ஏற்படுத்த முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் அகிலா தனஞ்ஜெயா இந்திய அணியைப் பலமாக மிரட்டிவிட்டார். எனினும் மற்ற பந்துவீச்சாளர்களும் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இலங்கை அணிக்கு பந்துவீச்சாளர்களால் பலன்கள் கிடைக்கும்.

இந்தியா - இலங்கை ஆகிய இரு அணிகளும் கடைசியாக மோதிய 20 ஒரு நாள் ஆட்டங்களில், இந்தியா 16 வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனவே இந்த ஒருநாள் போட்டியையும் தொடரையும் இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com