புரோ கபடி: ஜெய்ப்பூர் அணிக்கு 4-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடிப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 39-36 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது.
யு-மும்பா கேப்டன் அனுப் குமாரை சுற்றி வளைக்கும் ஜெய்ப்பூர் அணியினர்.
யு-மும்பா கேப்டன் அனுப் குமாரை சுற்றி வளைக்கும் ஜெய்ப்பூர் அணியினர்.

5-ஆவது சீசன் புரோ கபடிப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 39-36 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது.
இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜெய்ப்பூர் அணி 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் மும்பை அணி 4-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது. 
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் இரு அணிகளும் அபாரமாக ஆட, ஸ்கோர் 8-8 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. 12-ஆவது நிமிடத்தில் யு-மும்பாவை ஆல்அவுட்டாக்கிய ஜெய்ப்பூர் அணி 13-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 
அதைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் வீரர் ஜஸ்விர் சிங் தனது அபார ரைடின் மூலம் 3 புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி 16-ஆவது நிமிடத்தில் 18-9 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை எட்டியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ப்பூர் அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 24-14 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 26-ஆவது நிமிடத்தில் யு-மும்பா அணியை இரண்டாவது முறையாக ஆல் அவுட்டாக்கிய ஜெய்ப்பூர் அணி 35-19 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
30 நிமிடங்கள் வரை ஜெய்ப்பூரின் வசமே ஆட்டம் இருந்தது. இதன்பிறகு சற்று ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது யு-மும்பா அணி. குறிப்பாக கடைசி 5 நிமிடங்களில் அபாரமாக ஆடிய யு-மும்பா அணி வேகமாக புள்ளிகளை சேர்த்தது. எனினும் அந்த அணியால் புள்ளிகள் வித்தியாசத்தை குறைக்க முடிந்ததே தவிர, தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இறுதியில் ஜெய்ப்பூர் அணி 39-36 என்ற புள்ளிகள் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.
ஜெய்ப்பூர் தரப்பில் ஜஸ்விர் சிங் 10 புள்ளிகளையும், பவன் குமார் 9 புள்ளிகளையும் கைப்பற்றினர். 

இன்றைய ஆட்டங்கள்
பாட்னா பைரேட்ஸ்-தமிழ் தலைவாஸ்
நேரம்: இரவு 8
யு மும்பா-புணேரி பால்டான்
நேரம்: இரவு 9
இடம்: மும்பை
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com