உலக பாட்மிண்டன்: வெள்ளி வென்றார் சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலக பாட்மிண்டன்: வெள்ளி வென்றார் சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு விறு விறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட சிந்து 19}21, 22}20, 20}22 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சிந்து முன்னேறியது இது முதல் முறையாகும். இதில் அவர் தங்கம் வென்றிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.
தற்போது இறுதிச்சுற்று வரை முன்னேறியதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 2}ஆவது இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார். முதல் இந்தியராக, சாய்னா நெவால் ஜகார்த்தாவில் நடைபெற்ற கடந்த சாம்பியன்ஷிப்பில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.
இதனிடையே, இந்த உலக சாம்பியின்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு சாய்னா ஒரு வெண்கலம் பெற்றுத்தந்துள்ள நிலையில், சிந்து ஒரு வெள்ளியை வென்று தந்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2 பதக்கங்களைப் பெறுவதும் இது முதல் முறையாகும்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் நஜோமியை எதிர்கொண்டார் சிந்து. இதில் முதல் 2 செட்களை முறையே நஜோமி, சிந்து கைப்பற்றினர்.
வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டின் ஒவ்வொரு கேமிலும் இருவருமே கடுமையாக போட்டியிட்டதால், ஆட்டத்தின் பரபரப்பு இறுதிவரை நீடித்தது. எனினும் இறுதியில் நஜோமி வெற்றியை தனதாக்கினார்.
அரையிறுதியில் சாய்னாவை வீழ்த்திய நஜோமி, இறுதிச்சுற்றில் சிந்துவை வீழ்த்தியுள்ளார். நவோமி}சிந்து இதுவரை 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் தற்போது நஜோமி 4, சிந்து 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். ரியோ ஒலிம்பிக், சிங்கப்பூர் ஓபன் ஆகியவற்றில் நவோமியை சிந்து வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com