14 மணி நேர இடைவெளியில் டெஸ்ட் கிரிக்கெட் சந்தித்த இரு அதிர்ச்சிகள்!

இரு நாள்களில் இரு அதிர்ச்சிகள். டெஸ்ட் கிரிக்கெட் தழைத்தோங்குகிறது என சச்சின் ட்வீட்...
14 மணி நேர இடைவெளியில் டெஸ்ட் கிரிக்கெட் சந்தித்த இரு அதிர்ச்சிகள்!

இரு நாள்களில், 14 மணி நேர இடைவெளியில் இரு அதிர்ச்சித் தோல்விகளை டெஸ்ட் கிரிக்கெட் கண்டுள்ளது. யாருமே எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவை வங்கதேசமும் இங்கிலாந்தை மேற்கிந்தியத் தீவுகள் அணியும் தோற்கடித்து ஆச்சர்யத்தை உண்டுபண்ணியுள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையே டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 78.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 74.5 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலை பெற்ற வங்கதேசம், 2-ஆவது இன்னிங்ஸில் 79.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 265 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலியா, 70.5 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி. 20 ரன்களில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. வார்னர் சதமடித்தும் ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெறமுடியவில்லை. வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 28 ஓவர்களில் 85 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 17-ஆவது முறையாகும். இந்தப் பங்களிப்பால் ஆட்ட நாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமாக வெற்றி பெற்றுள்ளது. 

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 70.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 127 ஓவர்களில் 427 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து, தனது 2-ஆவது இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் 322 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 91.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது.

தொடக்க வீரர் பிராத்வெயிட் 95, ஷாய் ஹோப் 118 ரன்கள் எடுத்து இங்கிலாந்து பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்கள். முதல் இன்னிங்ஸிலும் பிராத்வெயிட் 134, ஹோப் 147 ரன்கள் எடுத்து இரு இன்னிங்ஸ்களிலும் அணிக்குச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஷாய் ஹோப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி விளக்கொளியில் மாலை 6.43 மணிக்கு முடிவு பெற்றது. கடைசி நாளின் கடைசிப் பகுதியில் 35 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹோப்பின் சதத்தால் அட்டகாசமான வெற்றியைப் பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

14 மணி நேர இடைவெளியில் இரு எதிர்பாராத முடிவுகளால் கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். சிறிய அணிகள் பெரிய அணிகளை வெற்றி கொள்வது டெஸ்ட் கிரிக்கெட்டை மேலும் பரபரப்பாக்கும் என்பது அவர்களுடைய கருத்து. சச்சின் உள்ளிட்ட இந்நாள், முன்னாள் வீரர்கள் சமூகவலைத்தளங்களில் இந்த இரு டெஸ்ட் போட்டிகள் குறித்தும் பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள். 

இரு நாள்களில் இரு அதிர்ச்சிகள். டெஸ்ட் கிரிக்கெட் தழைத்தோங்குகிறது என சச்சின் ட்வீட் வெளியிட்டுள்ளார். வாழ்த்துகள் வங்கதேசம். இப்படியொரு ட்வீட்டை வெளியிடுவேன் என நினைக்கவில்லை என்று மைக்கேல் கிளாக் ட்வீட் செய்துள்ளார். அருமை வங்கதேசம். சிறப்பான முயற்சியினால் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்துள்ளீர்கள் என்று சேவாக் ட்வீட் வெளியிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் தான் கிரிக்கெட்டின் முக்கியமான போட்டி என்று வாசிம் அக்ரம் பதிவு எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com