விராட் கோலிக்கு மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் பாராட்டு!

ஆணோ பெண்ணோ சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல உடற்தகுதியுடன் இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது...
விராட் கோலிக்கு மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் பாராட்டு!

சிஎன்என்-நியூஸ் 18 தொலைக்காட்சியின் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த இந்தியர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போது மக்களை எங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் மதிப்பு கிடைத்துள்ளது.

ஒருவர் மட்டும் அல்ல, என்னைத் தினமும் பலர் ஊக்கப்படுத்துகிறார்கள். சிலருடைய பெயரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும் என்றால் விராட் கோலியைச் சொல்வேன். அவர் தன் உடற்தகுதி மீது மிகுந்த அக்கறை செலுத்துகிறார். நானும் உடற்தகுதியில் கவனம் செலுத்த விராட் கோலிதான் காரணம். ஆணோ பெண்ணோ சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல உடற்தகுதியுடன் இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. நாங்கள் எங்கள் திறமையை வெளிப்படுத்த விராட் கோலி எங்களுக்கு ஊக்கமாக இருந்துள்ளார். அவருக்கு எங்களுடைய பெரிய நன்றி என்று கூறியுள்ளார்.  

மிதாலி ராஜ், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை 186 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 34 வயதான மிதாலி ராஜ் 6,190 ரன்கள் குவித்துள்ளார். 1999-ல் அறிமுகப் போட்டியில் களமிறங்கியபோதே, அதில் சதமடித்து தனது திறமையை உலகுக்குக் காட்டியவர் மிதாலி ராஜ். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக அரை சதங்கள் விளாசியவர் என்ற சாதனையும் மிதாலி ராஜ் வசமேயுள்ளது.

கடந்த ஜூலை மாதம், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 4-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து. அதேநேரத்தில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் 409 ரன்கள் குவித்தார். ஐசிசி மகளிர் கனவு அணியின் கேப்டனாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com