3-வது டெஸ்ட்: இந்திய அணி விரைவாக ரன்கள் குவிப்பு! விஜய் அரை சதம்!

முதல் நாளின் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது...
3-வது டெஸ்ட்: இந்திய அணி விரைவாக ரன்கள் குவிப்பு! விஜய் அரை சதம்!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளின் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் அரை சதம் எடுத்துள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் தில்லி ஃபெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.  தலா 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தத் தொடரில் 3-வது டெஸ்ட் ஆட்டம் தொடங்கியுள்ளது.  மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டம் டிரா ஆன நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 3 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்று இந்திய வீரர்கள் முனைப்புடன் களமிறங்கியுள்ளார்கள்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி,  பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராகுல், உமேஷ் யாதவுக்குப் பதிலாக தவன், ஷமி அணியில் இடம்பெற்றுள்ளார்கள். கடந்த 12 இன்னிங்ஸில் 9 அரை சதங்கள் எடுத்தும் ராகுலை அணியிலிருந்து நீக்கியுள்ளது பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.  

முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் அமர்க்களமாக இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினார் விஜய். தவனும் விரைவாக ரன்கள் குவித்ததால் முதல் 10 ஓவரில் இந்திய அணி நான்கு ரன்ரேட்டில் ரன்கள் எடுத்து வந்தது. ஆனால் 10வது ஓவரின் கடைசிப் பந்தில் தில்ரூவன் பெரேரா பந்துவீச்சில் 23 ரன்களில் வெளியேறினார் தவன். தில்ரூவன் பெரேரா டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ள 100-வது விக்கெட்டாகும் இது. 

அடுத்து வந்த புஜாரா, தவனைப் போலவே 4 பவுண்டரிகள் அடித்து 23 ரன்களில் லாஹிரு காமேஜ் பந்துவீச்சில் வீழ்ந்தார். 2 விக்கெட்டுகள் வீழ்ந்தபிறகும் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்துவந்தார்கள். இதனால் ரன்ரேட் நான்கிலேயே நீடித்தது. முரளி விஜய் 68 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இது அவருடைய 16-வது அரை சதமாகும். இந்தத் தொடரில் இடம்பெற்ற இரு டெஸ்டுகளிலும் முரளி விஜய் சிறப்பாக விளையாடியுள்ளதால் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்குவார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 51, கோலி 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். முதல் நாளின் முதல் பகுதியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தாலும் விரைவாக ரன்கள் குவித்ததால் ரன்ரேட் 4.29 ஆக உள்ளது. இதேவேகத்தில் ரன்கள் எடுத்தால் இன்றைய நாளின் முடிவில் 300 ரன்களை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com