2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 405 ரன்கள் பின்னடைவு

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 405 ரன்கள் பின்தங்கியுள்ளது.
2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 405 ரன்கள் பின்னடைவு

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடக்கிறது.

இதில் டாஸ் வென்று களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

சிறப்பாக ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி, 25 பவுண்டரிகளை விளாசி 243 ரன்களைக் குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது அதிகபட்சமாகும்.  முரளி விஜய், 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், இலங்கை வீரர்கள் மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்படுவதாக போட்டி நடுவர்களிடம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் அனைவரும் முகமுடி அணிந்து விளையாடினர்.

இதன்காரணமாக இலங்கையின் காமாகே, லக்மல் மற்றும் சடீரா ஆகிய மூவரும் களத்தில் இருந்து வெளியேறினர். அப்போது மைதானத்தில் சலசலப்பு நிலவியது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் கருணரத்னே, இந்தியாவின் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே சாஹாவிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்-அவுட்டானார். தில்ருவன் பெரேரா 42 ரன்கள் சேர்த்து வெளியேறினார். தனஞ்செய டீ சில்வா 1 ரன்னுடன் பெவிலியின் திரும்பினார்.

பின்னர் கேப்டன் சண்டிமலுடன் ஜோடி சேர்ந்த மாத்யூஸ் அரைசதம் கடந்தார். இதனால் 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. மாத்யூஸ் 57, சண்டிமல் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த டெஸ்டில் இன்னும் 3 நாள் ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இலங்கை 405 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com