மாறாத மே.இ. அணி: முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி!

டெஸ்ட் தொடரை வென்று புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல இந்த டெஸ்டிலும்...
மாறாத மே.இ. அணி: முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 

வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 45.4 ஓவர்களில் 134 ரன்களுக்குச் சுருண்டது. அணியில் அதிகபட்சமாக கிரென் பாவெல் 42 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 7 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து, 148.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 520 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிளன்டெல் 107, டிரென்ட் போல்ட் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச் 3, கம்மின்ஸ், சேஸ் தலா 2, கேப்ரியேல், ஹோல்டர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 3-ஆம் நாள் முடிவில் 66 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. பிரத்வெயிட் 79, ஷாய் ஹோப் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். மேற்கிந்தியத் தீவுகள் 172 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அணியின் வசம் 8 விக்கெட்டுகள் இருந்தன. 

இந்நிலையில் இன்று தனது ஆட்டத்தைத் தொடங்கிய அணி மேற்கிந்தியத் தீவுகள் 106 ஓவர்களில் 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக பிரத்வெயிட் 91 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி 3 விக்கெட்டுகள் எடுத்தார். நீல் வேக்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 67 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

2012-ல் மேற்கிந்தியத் தீவுகளுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரில் தோற்றது. அந்தத் தொடரில் வெற்றிகண்ட மே.இ. அணிக்கு அதன்பிறகு கடந்த ஐந்து வருடங்களில் வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகளைத் தவிர வேறெந்த அணியையும் டெஸ்ட் தொடரில் வெல்லமுடியவில்லை. இந்த நிலையில் நியூஸிலாந்துக்குச் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது மே.இ. அணி. 2 டெஸ்டுகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை வென்று புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல இந்த டெஸ்டிலும் மோசமாக விளையாடியுள்ளது மே.இ. அணி. இந்நிலைமை என்று மாறுமோ?

அடுத்த டெஸ்ட் போட்டி டிசம்பர் 9 அன்று ஹேமில்டனில் தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com