3-வது டெஸ்ட்: மேத்யூஸ் சதம்! இலங்கை சிறப்பான பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் ஏஞ்செலோ மேத்யூஸ் சதமெடுத்துள்ளார்... 
3-வது டெஸ்ட்: மேத்யூஸ் சதம்! இலங்கை சிறப்பான பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் ஏஞ்செலோ மேத்யூஸ் சதமெடுத்துள்ளார். 

தில்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 44.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் 57, கேப்டன் சண்டிமல் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்றைய நாளின் முதல் பகுதியில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளாவது எடுத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை மேத்யூஸும் சண்டிமலும் அருமையாக எதிர்கொண்டார்கள். நிதானமாக ரன் சேர்த்தாலும் கோலியின் அனைத்துத் திட்டங்களையும் முறியடித்தார்கள்.

இரண்டு மணி நேரம் விளையாடி 61 ரன்கள் மட்டும் எடுத்தாலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் முதல் பகுதி இந்திய அணிக்கு ஏமாற்றமாக அமைந்தது. சண்டிமல் 7 பவுண்டரிகளுடன் 145 பந்துகளில் அரை சதமெடுத்தார்.

3-வது டெஸ்டின் மூன்றாம் நாளில் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 71 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் 90, சண்டிமல் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இலங்கை இன்னும் 344 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. 

உணவு இடைவேளைக்குப் பிறகு, 231 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார் மேத்யூஸ். இது அவருடைய 8-வது சதமாகும். 19 டெஸ்டுகளுக்குப் பிறகு மேத்யூஸ் சதமெடுத்துள்ளார். அவர் சதத்தை நெருங்கும் சமயத்தில் ஸ்லிப் பகுதியில் ரோஹித் ஒரு கேட்ச்சைத் தவறவிட்டார். இந்திய அணிக்குத் தொடர்ந்து அழுத்தம் அளித்த மேத்யூஸ் - சண்டிமல் ஜோடி 399 பந்துகளில் 150 ரன்களை எட்டியது. 

இருவருடைய கூட்டணி 181 ரன்களை எட்டியபோது 111 ரன்களில் மேத்யூஸின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார் அஸ்வின். 2013-ல் நாகபுரியில் இந்தியாவின் பெல் - டிராட் ஆகிய இருவரும் 470 பந்துகளை எதிர்கொண்டார்கள். அதன்பிறகு இந்திய மண்ணில் 400 பந்துகளுக்கு அதிகமாக (476 பந்துகள்) விளையாடிய வெளிநாட்டு ஜோடி என்கிற பெருமை மேத்யூஸ் - சண்டிமலுக்குக் கிடைத்துள்ளது. 

3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 102 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. சண்டிமல் 98, சதீரா சமரவிக்ரமா 4 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com