டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்க இலங்கை அணி போராட்டம்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி கடைசி நாளின் மதிய உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்க இலங்கை அணி போராட்டம்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி கடைசி நாளின் மதிய உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

தில்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது இந்தியா. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, 135.3 ஓவர்களில் 373 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 163 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 246-ஆக ஸ்கோர் இருந்தபோது, டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கோலி. 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கருணாரத்னே 13 ரன், சமரவிக்ரமா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். சில்வாவுடன் ஜோடி சேர்ந்த லக்மல் ரன் எதுவுமின்றி பெவிலியன் திரும்பினார். 4-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. சில்வா 13 ரன்களுடனும் மேத்யூஸ் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தார்கள். 

இன்னும் 379 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 5-ஆவது நாளான இன்று இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. மேத்யூஸ் 1 ரன்னில் இருந்தபோது ஜடேஜாவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். ஜடேஜா அப்போது நோ பால் வீசினாலும் நடுவர்கள் அதைக் கவனிக்காததால் மேத்யூஸ் பெவிலியன் திரும்பவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன்பிறகு ஜோடி சேர்ந்த சில்வா - சண்டிமல் இந்திய அணியின் பந்துவீச்சைத் திறமையாக எதிர்கொண்டார்கள். இதனால் கடைசி நாளின் முதல் பகுதியில் மேலும் விக்கெட்டுகள் எதுவும் எடுக்கமுடியாத நிலைமை ஏற்பட்டது. 

5-ம் நாளின் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 47 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற இன்னமும் 291 ரன்கள் தேவை. இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவை. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றியே அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com