இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்தியா

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு இந்தியா 410 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இலங்கை அணி வீரர் சுரங்கா லக்மலை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.
இலங்கை அணி வீரர் சுரங்கா லக்மலை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு இந்தியா 410 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, 4-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 379 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 5-ஆவது நாளான புதன்கிழமை இலங்கை அணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த இலக்கை எட்டுவது கடினம் என்பதால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
தில்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. இதில் முரளி விஜய்-விராட் கோலி ஜோடி அபாரமாக ஆடி சதம் அடிக்க, முதல் நாளில் இந்தியா 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் எடுத்தது. அதையடுத்து, ஆடிய இந்தியா 536 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 3-ஆம் நாள் ஆட்ட முடிவில், 130 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. சண்டிமல் 147, லக்ஷன் சன்டகன் ரன்கள் இன்றி களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 4-ஆவது நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஒருபுறம் சன்டகன் தோள் கொடுக்க மறுபுறம் சண்டிமல் 150 ரன்களைக் கடந்தார்.
164 ரன்கள் எடுத்திருந்தபோது, இஷாந்த் சர்மா வீசிய ஓவரில் தவனிடம் கேட்ச் கொடுத்து சண்டிமல் வெளியேறினார். இவ்வாறாக அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மொத்தம் 135.3 ஓவர்களில் 373 ரன்கள் எடுத்திருந்தது. அதிக பட்சமாக இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, 163 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. தொடக்க வீரரான முரளி விஜய், 9 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
மறுபுறம், தவனுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். எனினும், அவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதைத் தொடர்ந்து புஜாரா களமிறங்கினார். புஜாரா, தவன் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சில்வா வீசிய பந்தில் புஜாரா ஆட்டமிழக்க, கேப்டன் கோலி களமிறங்கினார். இந்த நிலையில், தவன் 67 ரன்களில் வெளியேற ரோஹித் களமிறங்கினார். அரை சதம் கண்டபோது கோலியும் ஆட்டமிழக்க ரோஹித்துடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரோஹித் 49 பந்துகளில் அரை சதம் எடுத்த நிலையில், இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 246-ஆக இருந்தது. அப்போது, கேப்டன் கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கருணாரத்னே 13 ரன், சமரவிக்ரமா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். சில்வாவுடன் ஜோடி சேர்ந்த லக்மல் ரன் எதுவுமின்றி பெவிலியன் திரும்பினார். 4-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் சில்வா 13 ரன்களுடனும் மேத்யூஸ் ரன்கள் இன்றியும் களத்தில் உள்ளனர். 

துளிகள்....
* இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மொத்தம் 610 ரன்கள் குவித்துள்ளார்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை (164) முதல் இன்னிங்ஸில் பதிவு செய்தார் இலங்கை கேப்டன் சண்டிமல். இதற்கு முன்பு இந்திய அணிக்கு எதிராக கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்டி போட்டியில் இவர் 162 எடுத்திருந்தார்.

* மொத்தம் 5 இன்னிங்ஸில் விளையாடியுள்ள இந்திய அணியின் ரஹானே 17 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com