உலக ஹாக்கி லீக்: அரையிறுதியில் இந்தியா-ஆர்ஜென்டீனா மோதல்

உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவும், ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனாவும் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவும், ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனாவும் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தியிருந்தது இந்தியா. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் ஆர்ஜென்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதையடுத்து அரையிறுதியில் அந்த அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற காலிறுதியில் ஆர்ஜென்டீனா ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அதன் பலனாக அந்த அணி தொடர்ச்சியாக இரு கோல்கள் அடித்தது. ஆட்டத்தின் 21-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் லுகாஸ் வில்லா, ஃபீல்டு கோல் ஒன்றை அடித்து அணிக்கு முன்னிலை தந்தார். இங்கிலாந்து தனது முதல் கோலுக்கு போராடி வந்த நிலையில் ஆர்ஜென்டீனாவின் மட்டியாஸ் பாரெடெஸ் 29-ஆவது நிமிடத்தில் கோலடித்து, தனது அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார். இந்நிலையில், ஆர்ஜென்டீனாவுக்கு பதிலடியாக அதே நிமிடத்தில் இங்கிலாந்து தனது கோல் கணக்கை தொடங்கியது.
அந்த அணியின் டேவிட் கான்டன் அணிக்கான முதல் கோலை அடித்தார். இவ்வாறாக முதல்பாதி ஆட்டம் முடிவுக்கு வர, அதில் ஆர்ஜென்டீனா 2-1 என முன்னிலை வகித்தது. 
பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியிலும் ஆர்ஜென்டீனாவின் கையே ஓங்கியிருந்தது. 34-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அதன் வீரர் ஜுவான் கிலார்டி கோலாக மாற்றினார். இதனால் ஆர்ஜென்டீனா 3-1 என்ற நிலையை எட்டியது.
ஏறத்தாழ ஆர்ஜென்டீனாவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்தின் ஆடம் டிக்ஸன் ஃபீல்டு கோல் ஒன்றை அடிக்க, இங்கிலாந்து கோல் எண்ணிக்கை 2 ஆனது. இறுதியில் ஆர்ஜென்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.
ஜெர்மனி வெற்றி: இதனிடையே, மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com