இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடும் மும்பை! வலுவான நிலையில் கர்நாடகா!

மும்பை அணி, 3-ம் நாள் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது...
இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடும் மும்பை! வலுவான நிலையில் கர்நாடகா!

நாகபுரியில் நடைபெற்று வரும் ரஞ்சிப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி மும்பைக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 397 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த மும்பை அணி, 3-ம் நாள் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகம் பந்துவீச தீர்மானித்தது. மும்பை தனது முதல் இன்னிங்ஸில் 56 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் தவல் குல்கர்னி அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். கர்நாடக தரப்பில் வினய் குமார் 6 விக்கெட் எடுத்தார். பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கர்நாடக அணி, 2-ம் நாள் முடிவில் 122 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 395 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் கோபால் 80, வினய் குமார் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் 163.3 ஓவர்களில் 570 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது கர்நாடக அணி. 24 வயது ஷ்ரேயஸ் கோபால் பிரமாதமாக விளையாடி 150 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி விக்கெட்டுக்கு கோபாலும் அரவிந்த் ஸ்ரீநாத்தும் 92 ரன்கள் எடுத்தார்கள். அரவிந்த் 41 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து மும்பை அணியை மேலும் வெறுப்பேற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் கர்நாடக அணி 397 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் எடுத்த பிருத்வி ஷா, இரண்டாவது இன்னிங்ஸிலும் ஏமாற்றினார். 14 ரன்களில் அரவிந்த் பந்துவீச்சில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பிஸ்டாவும் 20 ரன்களில் கெளதம் பந்துவீச்சில் வீழ்ந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய அகில் இன்றைய நாளின் இறுதியில் 26 ரன்களில் வெளியேறினார். 

மும்பை அணி, 3-ம் நாள் இறுதியில் 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. சூர்யகுமார் யாதவ் 55, ஆகாஷ் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

277 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை வசம் 7 விக்கெட்டுகள் மீதமுள்ளன. இதனால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com