காயமடைந்த சிறுவனை களம்விட்டு ஓடிச்சென்று நலம் விசாரித்த ஆஸி. கிரிக்கெட் வீராங்கனை

சிக்ஸர் அடித்த பந்தினால் காயமைடந்த சிறுவனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஓடிச்சென்று நலம் விசாரித்தது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுத்தந்தது.
காயமடைந்த சிறுவனை களம்விட்டு ஓடிச்சென்று நலம் விசாரித்த ஆஸி. கிரிக்கெட் வீராங்கனை

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 போட்டித் தொடரான பிக்பாஷ் கிரிக்கெட் லீக் மிகப்பிரபலம். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போன்று மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது. இதில் ஆடவருக்கு மட்டும் இல்லாமல் மகளிர் பிக்பாஷ் லீக் போட்டிகளும் நடைபெறுகின்றன.

நடப்பு ஆண்டின் மகளிர் பிக்பாஷ் லீக்கின் 3-ஆவது போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் அதிர்ச்சி கலந்த மனிதாபிமானச் சம்பவம் நடைபெற்றது. இது தற்போது அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருகிறது.

இதில், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை எல்லிஸ் பெர்ரி, சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அப்போது அவர் சிக்ஸருக்கு விளாசிய பந்து பார்வையாளர்களிடத்தில் இருந்த சிறுவனின் தலையில் பலமாகத் தாக்கியது. இதனால் அச்சிறுவனம் மைதானத்திலேயே மயங்கி விழுந்தான்.

உடனடியாக களத்தில் இருந்த எல்லிஸ் இச்சம்பவத்தைக் கண்டு பதறி பார்வையாளர்களிடத்துக்கு ஓடிச்சென்று அச்சிறுவனின் நிலை குறித்து பார்வையிட்டார். மேலும், அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வரை உடனிருந்தார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டான். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மீண்டும் பேட் செய்ய வந்த எல்லிஸ், அவரின் அதிரடி ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தார்.

இதனால், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 242 ரன்கள் குவித்து சாதனைப் படைத்து வெற்றிபெற்றது. எல்லிஸ் பெர்ரி 91 ரன்கள் விளாசினார். கார்ட்னர் அதிவேக சதம் (52 பந்துகளில் 114 ரன்கள்) குவித்து சாதனைப் படைத்தார். இதில் 10 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். 

எல்லிஸ் அடித்த பந்து பார்வையாளர்கள் அரங்கில் இருந்த ஒரு தடுப்பின் மீது மோதி அந்த சிறுவனைத் தாக்கியதாக பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் எல்லிஸின் இந்த மனிதாபிமானச் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com