தெ.ஆ. தொடர்: இந்திய அணி பங்கேற்கவிருந்த பயிற்சி ஆட்டம் ரத்து!

பயிற்சி ஆட்டங்களுக்குப் பதிலாகத் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட இந்திய அணி விருப்பம் தெரிவித்துள்ளதால்...
தெ.ஆ. தொடர்: இந்திய அணி பங்கேற்கவிருந்த பயிற்சி ஆட்டம் ரத்து!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 24-ம் தேதி நிறைவடைகிறது. அதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்காக டிசம்பர் 27-ம் தேதி அந்நாட்டுக்கு இந்திய அணி புறப்படுகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர்,  6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் அந்நாட்டு அணியுடன் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5 அன்று கேப் டவுனில் தொடங்கவுள்ளது. டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரம் மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். 

டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி இருநாள் பயிற்சி ஆட்டம் ஒன்றில் பங்கேற்க இருந்தது. இந்நிலையில் அந்தப் பயிற்சி ஆட்டம் ரத்தாகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. பயிற்சி ஆட்டங்களுக்குப் பதிலாகத் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட இந்திய அணி விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராக போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி சமீபத்தில் கூறினார். தொடர்களுக்கு இடையே போதிய அவகாசம் இல்லாத காரணத்தால், இருக்கும் நேரத்தில் அந்தப் போட்டிக்கு தயாராவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பெரிய அளவிலான தொடர்களுக்கு அணியினர் சற்று வித்தியாசமான முறையில் தயாராக வேண்டியுள்ளது. எனவே, இரு முக்கியமான தொடர்களுக்கு இடையே போதிய அவகாசம் இருக்க  வேண்டும். அவ்வாறு இல்லாத சூழ்நிலையில், டெஸ்ட் போட்டி முடிவுகளைத் தொடர்ந்து வீரர்களின் ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. நாங்கள் விரும்பும் வகையில் தயாராவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்தும் சரிவர செயல்படவில்லை என்றால் நாங்கள் விமர்சனத்துக்கு உள்பட்டவர்கள். இதன் காரணமாகவே, அந்தத் தொடருக்குத் தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிரான தொடரில் பவுன்சர்களுக்கு சாதகமான மைதானத்தில் போட்டியை நடத்துமாறு கோரினோம் என்று கூறினார்.

இந்நிலையில் போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் பயிற்சி ஆட்டம் எதுவுமின்றி இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com