முதல் ஒருநாள் ஆட்டம்: இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
முதல் ஒருநாள் ஆட்டம்: இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து பேட் செய்த இலங்கை 20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக பேட் செய்த இந்திய அணியில் பேட்டிங் வரிசை மிக மோசமான அளவில் சரிவை சந்தித்தது. அணியின் 4 வீரர்கள் டக் அவுட் ஆக, எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தோனி மட்டும் இறுதிவரை நின்று இந்திய அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். 
அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றமாக, ரஹானேவுக்குப் பதில் 3-ஆவது பேட்ஸ்மேனாக ஷ்ரேயஸ் ஐயர் களம் கண்டார்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச தீர்மானித்தது. 
இந்திய அணியின் வழக்கமான தொடக்க ஜோடியான ரோஹித்-தவன் பேட்டிங்கை தொடங்கினர். இதில் தவன் டக் அவுட் ஆனார். அவர் மேத்யூஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் களத்துக்கு வர, மறுமுனையில் கேப்டன் ரோஹித் 2 ரன்களில் வெளியேறினார். 
அவர் லக்மல் வீசிய பந்தில் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், லக்மலின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். பின்னர் வந்த மணீஷ் பாண்டே 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
பின்னர் தோனி களமாட வந்தார். இந்நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு நுவான் பிரதீப் பந்துவீச்சில் போல்டானார். இவ்வாறாக இந்தியா 16 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இந்நிலையில் அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய தோனி, விக்கெட் சரிவை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். உடன் நின்ற ஹார்திக் பாண்டியா 2 பவுண்டரிகள் விளாசி, 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த புவனேஸ்வர் குமார் டக் அவுட் ஆனார். இதனிடையே தோனி 78 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
பாண்டியாவை அடுத்து வந்த குல்தீப் யாதவ் 4 பவுண்டரிகள் உள்பட 19 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த பும்ரா டக் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் தோனி. இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் அதிகபட்சமாக 4, நுவான் பிரதீப் 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 113 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இலங்கையில் தொடக்க வீரர் குணதிலகா ஒரு ரன்னில் வெளியேற, உடன் வந்த உபுல் தரங்கா அரைசத வாய்ப்பை நழுவவிட்டு 10 பவுண்டரிகள் உள்பட 49 ரன்களில் வெளியேறினார். 3-ஆவது வீரராக களம் கண்ட திரிமானி டக் அவுட் ஆனார்.
இறுதியில் மேத்யூஸ்-டிக்வெல்லா ஜோடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது. 20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து வென்றது இலங்கை. மேத்யூஸ் 5 பவுண்டரிகள் உள்பட 25, டிக்வெல்லா 5 பவுண்டரிகள் உள்பட 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
இந்திய தரப்பில் புவனேஸ்வர், பும்ரா, பாண்டியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 65 ரன்கள் எடுத்த தோனி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கேப்டன்கள் கருத்து

இது ஒரு பாடம்

தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், "இந்த ஆட்டம் எங்களுக்கு ஒரு பாடம். இந்த அனுபவத்துடன் எதிர்வரும் ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். எங்களது ஸ்கோர் இன்னும் 80 ரன்கள் அதிகமாக இருந்தால், ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். தோனியின் ஆட்டம் ஆச்சர்யமளிக்கவில்லை. இதுபோன்ற சூழல்களை எவ்வாறு கையாள வேண்டும் என அவர் நன்றாக அறிந்து அதற்கேற்றவாறு ஆடினார்' என்றார்.

பவுலர்கள் பாராட்டுக்குறியவர்கள்

வெற்றி குறித்து இலங்கை கேப்டன் திசர பெரேரா கூறுகையில், "இந்தியாவை இத்தகைய குறைவான ஸ்கோருக்கு கட்டுப்படுத்திய எங்கள் அணி பந்துவீச்சாளர்களின் முயற்சி பாராட்டுக்குறியது. அவர்கள் தங்கள் பணியை மிகச் சரியாக மேற்கொண்டனர். அதுவே அணியின் வெற்றிக்குக் காரணம். ஆடுகளம் இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. எப்படியும் 250-260 ரன்கள் வரையில் ஸ்கோர் செல்லும் என்று நினைத்தோம்' என்றார்.

துளிகள்...


2

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்கோர் 112 ஆகும். இது, சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா பதிவு செய்யும் 2-ஆவது குறைந்த ஸ்கோர் ஆகும். முன்னதாக, 1986-ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற இதே இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 78 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா.

16

இந்த ஆட்டத்தில் 16 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இத்தகைய குறைவான ரன்களுக்கு இந்தியா 5 விக்கெட்டுகளை இழப்பது இது முதல் முறையாகும். முன்னதாக, 1983 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்ததே குறைந்தபட்சமாக இருந்தது.

2/2

இந்த ஆட்டத்தின் முதல் 5 ஓவர்கள் முடிவில் 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. இது, 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகான போட்டிகளில் முதல் 5 ஓவர்களில் இந்தியா எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்களாகும். அதேவேளையில் குறைந்த ரன்கள் அடித்த அணிகளின் பட்டியலில் 2-ஆவது இடத்தில் சேர்ந்துள்ளது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

ரோஹித் சர்மா (சி) டிக்வெல்லா (பி) லக்மல் 2
ஷிகர் தவன் எல்பிடபிள்யூ (பி) மேத்யூஸ் 0
ஷ்ரேயஸ் ஐயர் (பி) பிரதீப் 9
தினேஷ் கார்த்திக் எல்பிடபிள்யூ (பி) லக்மல் 0
மணீஷ் பாண்டே (சி) மேத்யூஸ் (பி) லக்மல் 2
எம்.எஸ்.தோனி (சி) குணதிலகா (பி) பெரேரா 65
ஹார்திக் பாண்டியா (சி) மேத்யூஸ் (பி) பிரதீப் 10
புவனேஸ்வர் குமார் (சி) டிக்வெல்லா (பி) லக்மல் 0
குல்தீப் யாதவ் (ஸ்டம்ப்டு) டிக்வெல்லா (பி) தனஞ்ஜெயா 19
ஜஸ்பிரீத் பும்ரா (பி) பதிரானா 0
யுவேந்திர சாஹல் நாட் அவுட் 0
உதிரிகள் 5 
மொத்தம் (38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 112
விக்கெட் வீழ்ச்சி: 1-0(தவன்), 2-2(ரோஹித்), 3-8(தினேஷ்), 4-16(மணீஷ்), 5-16(ஷ்ரேயஸ்), 6-28(பாண்டியா), 7-29(புவனேஸ்வர்), 8-70(குல்தீப்), 9-87(பும்ரா), 10-112(தோனி).
பந்துவீச்சு: லக்மல் 10-4-13-4, மேத்யூஸ் 5-2-8-1, பிரதீப் 10-4-37-2, பெரேரா 4.2-0-29-1, தனஞ்ஜெயா 5-2-7-1, பதிரானா 4-1-16-1.

இலங்கை
தனுஷ்கா குணதிலகா (சி) தோனி (பி) பும்ரா 1
உபுல் தரங்கா (சி) தவன் (பி) பாண்டியா 49
லாஹிரு திரிமானி (பி) புவனேஸ்வர் 0
ஏஞ்ஜெலோ மேத்யூஸ் நாட் அவுட் 25
நிரோஷன் டிக்வெல்லா நாட் அவுட் 26
உதிரிகள் 13
மொத்தம் (20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு) 114
விக்கெட் வீழ்ச்சி: 1-7(குணதிலகா), 2-19(திரிமானி), 3-65(தரங்கா).
பந்துவீச்சு: புவனேஸ்வர் 8.4-1-42-1, பும்ரா 7-1-32-1, பாண்டியா 5-0-39-1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com