இந்தியாவில் ஆப்கன் அணியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட்: பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் முடிவு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டி 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ளது
பிசிசிஐ அமைப்பின் தாற்காலிகத் தலைவர் சி.கே.கன்னாவின் (நடுவில்) தலைமையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டம். உடன், உயரதிகாரிகள். 
பிசிசிஐ அமைப்பின் தாற்காலிகத் தலைவர் சி.கே.கன்னாவின் (நடுவில்) தலைமையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டம். உடன், உயரதிகாரிகள். 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டி 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மொத்தம் 81 கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுதவிர, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பிசிசிஐ தாற்காலிக பொதுச் செயலர் அமிதாப் சௌதரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆப்கன் அணி தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2019-ஆம் ஆண்டில் விளையாட உள்ளது. எனினும், இரு நாடுகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு நீடித்து வருவதால் அந்த அணியின் முதல் டெஸ்ட் போட்டியை நடத்த முடிவுசெய்துள்ளோம்.
கடந்த 2015 முதல் 2019-ஆம் ஆண்டு வரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 390 நாள்கள் இந்திய அணி விளையாடுகிறது. 
2021-ஆம் ஆண்டு இந்தியா சார்பில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியின்ஸ் கோப்பை, 2023-ஆம் ஆண்டு நடத்தவுள்ள உலகக் கோப்பை ஆகிய போட்டிகளைத் தவிர்த்து, 2019 முதல் 2023 வரை இந்திய அணி 306 நாள்கள் விளையாடும் என்றார் அமிதாப் சௌதரி.
ஆப்கன், அயர்லாந்து ஆகிய 2 அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ஐசிசி அங்கீகாரம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு: இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்வைத்துள்ள கோரிக்கையும் ஆலோசனைக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது.
மேலும், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாக நடவடிக்கைகளில் தொழிலதிபர் லலித் மோடியை தலையிட வைக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில், அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை பிசிசிஐ திங்கள்கிழமை ரத்து செய்தது. அத்துடன், கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனையை தேசிய ஊக்க மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு (நாடா) நடத்த வேண்டிய தேவையில்லை என்ற தனது முந்தைய முடிவிலேயே பிசிசிஐ நீடிக்கிறது. 
ஐபிஎல் கொச்சி அணி விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐபிஎல் போட்டியிலிருந்து கொச்சி அணியை நீக்கியதற்காக ரூ.850 கோடியை அந்த அணிக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
அதிக டி20 போட்டிகள்: பிசிசிஐ உயரதிகாரி ஒருவர் கூறுகையில், வரும் ஆண்டுகளில் டி20 போட்டிகளை அதிகமாக நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது' என்றார்.
பிசிசிஐ முடிவுக்கு ஆப்கன் நன்றி: இதனிடையே, ஆப்கன் அணியின் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு பிசிசிஐ முன்வந்ததற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் அடிஃப் மாஷல் நன்றி தெரிவித்தார்.
அந்நாட்டு அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஆப்கனுக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கன் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
ஆப்கன் அணி கடந்த 2010-ஆம் ஆண்டில் முதல்முறையாக டி20 போட்டிகளில் களம் கண்டது. ஆப்கன்-அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி, அண்மையில் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com