துபை ஃபைனல்ஸில் சாம்பியன் பட்டம் வெல்வேன்

துபையில் புதன்கிழமை தொடங்கவுள்ள உலக சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்புகிறேன் என்று
துபை ஃபைனல்ஸில் சாம்பியன் பட்டம் வெல்வேன்

துபையில் புதன்கிழமை தொடங்கவுள்ள உலக சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்த ஆண்டை நிறைவு செய்ய விரும்புகிறேன் என்று இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்த ஆண்டு எனக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டு இரண்டு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்றிருக்கிறேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆட்டத்தில் எனது செயல்பாடுகள் மீது மிகவும் திருப்தி அடைந்துள்ளேன். துபை சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸில் சாம்பியின் பட்டம் வென்று இந்த ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்ய விரும்புகிறேன்.
சவால் நிறைந்தது: அந்தப் போட்டி அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஏனென்றால், உலகின் தலைச்சிறந்த வீராங்கனைகள் அந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். எனவே, அப்போட்டியில் விளையாட தயாராகி வருகிறேன். இந்த ஆண்டு நான் விளையாடிய போட்டிகளில் எந்த ஆட்டம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கேட்கிறீர்கள். 
ஒரு ஆட்டத்துக்கும் மற்றொரு ஆட்டத்துக்கும் வித்தியாசம் உண்டு. ஒவ்வொரு ஆட்டமுமே கடினமானதுதான். இருப்பினும், இந்திய ஓபன் சீரிஸில் இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுக்கு எதிரான ஆட்டமும், ஜப்பான் வீராங்கனை நோúஸாமி ஒகுஹராவுக்கு எதிரான ஆட்டமும் எனக்கு தனிப்பட்ட முறையில் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த ஆட்டங்களாகக் கருதுகிறேன். ஒவ்வொரு வீராங்கனையுமே பிரத்யேக ஆட்டத்திறனை கொண்டவர்கள்.
பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் அனைத்து ஆட்டங்களையுமே என்னால் எதிர்கொள்ள முடிந்தது என்றார் சிந்து.
பாட்மிண்டனில், உலகத் தரவரிசையில் முதல் 15 இடங்களில் இருக்கும் வீரர்-வீராங்கனைகள் அடுத்த ஆண்டு முதல் குறைந்தபட்சம் 12 போட்டிகளில் விளையாட வேண்டும் என்று சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து சிந்து கூறியதாவது:
அடுத்த ஆண்டில், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதிக போட்டிகளில் பங்கேற்பது சவாலான காரியம்தான். இதுதொடர்பாக எனது பயிற்சியாளருடன் விவாதித்து திட்டமிடுவேன் என்றார் அவர்.
இந்த ஆண்டில் நடைபெற்ற அனைத்து 12 சூப்பர் சீரிஸ் போட்டிகளிலும் சிந்து பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com