இலங்கைக்கு எதிராக இன்று 2-ஆவது ஒரு நாள் ஆட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே புதன்கிழமை இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு எதிராக இன்று 2-ஆவது ஒரு நாள் ஆட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே புதன்கிழமை இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
ஹிமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில், இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
இதற்கு முன்பு, இலங்கை அணியுடன் மூன்று டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடிய கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இதையடுத்து முதலாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கிய இலங்கை, நினைத்தது போல் வெற்றி பெற்றது.
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் களம் இறங்கிய இந்தியா, 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி 65 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியிருந்தார்.
அந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா 2 ரன்களிலும், அதிரடி தொடக்க ஆட்டக்காரரான தவன் 'டக்' அவுட்டும் ஆகினர். ஸ்ரேயஸ் ஐயர் 9 ரன்களிலும், 18 பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் எதுவும் எடுக்காமல் தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழந்தனர். 16 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது இந்திய அணி.
இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தினாலேயே சொற்ப ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததாக ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட்டை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருபவர்களின் கருத்தாக உள்ளது.
இருப்பினும், அந்த ஆட்டத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாக ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். எனவே, இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள், இலங்கை அணி பேட்ஸ்மேன்களை அதிக ரன்கள் எடுக்காமல் கட்டுப்படுத்த தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் இலங்கை அணியினர் களம் இறங்குவார்கள்.
அந்த அணிக்கு இந்திய அணி உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


ஆடுகளம் எப்படி?
மொஹாலி மைதானத்தில் இதுவரை 23 ஒரு நாள் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. 30,000 ரசிகர்கள் வரை இந்த மைதானத்தில் அமர்ந்து பார்க்க முடியும்.
முதலில் பேட்டிங் செய்த அணி 14 ஆட்டங்களிலும், முதலில் பந்துவீசிய அணி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை தென்னாப்பிரிக்கா அணி எடுத்ததே இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
ஒரு நாள் போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோர் 89. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியபோது அனைத்து விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை பாகிஸ்தான் எடுத்திருந்தது.
ப்ளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர்?
காயம் காரணமாக கேதர் ஜாதவுக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்தார் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரும், 18 வயது இளைஞருமான வாஷிங்டன் சுந்தர். முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மொஹாலியில் ஆடும் லெவனில் தான் சேர்க்கப்பட்டால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடரை வெல்வோம் 
தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடியது போல், மொஹாலியிலும் விளையாடினால், நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று இலங்கை கேப்டன் திசர பெரேரா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'எங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பு. 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றி விடுவோம். 200 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்' என்றார்.


நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், நேரம்: 11.30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com