ஆஷஸ் டெஸ்ட்: டேவிட் மலான் சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து!

ஆஷஸ் டெஸ்ட்: டேவிட் மலான் சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் டேவிட் மலான் பிரமாதமாக விளையாடி சதமெடுத்துள்ளார்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் டேவிட் மலான் பிரமாதமாக விளையாடி சதமெடுத்துள்ளார். 

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

5-வது ஓவரில் குக்கின் விக்கெட்டை 7 ரன்களில் வீழ்த்தினார் ஸ்டார்க். பிறகு வந்த வின்ஸ், 20 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து 25 ரன்கள் எடுத்து ஜேஸில்வுட் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ரூட் வேகமாக 20 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஸ்டோன்மேன் பொறுப்புடன் விளையாடி அரை சதமெடுத்தார். ஆனால் அவரும் 56 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

38-வது ஓவரின்போது 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துத் தடுமாறிக்கொண்டிருந்தது இங்கிலாந்து. முதல்நாளின் திருப்பம் இதற்குப் பிறகுதான் உண்டானது. முதலிரண்டு டெஸ்டுகள் போல இதிலும் இங்கிலாந்து அணி தடுமாறப் போகிறது என்று எண்ணியபோது நிலைமையை மாற்றிக்காட்டினார்கள் டேவிட் மலானும் பேர்ஸ்டோவும். தேநீர் இடைவேளை வரைக்கும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு ஆஸி. பந்துவீச்சாளர்களை மலானும் பேர்ஸ்டோவும் திறமையாகக் கையாண்டார்கள். 87 பந்துகளில் அரை சதம் எடுத்த மலான், தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். கூடவே பேர்ஸ்டோவும் அரை சதமெடுத்து அசத்தினார்.

81 ஓவருக்குப் பிறகுப் புதிய பந்தைத் தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி. எனினும் மலானின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. 159 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் சதமெடுத்தார் மலான். இதனால் முதல் நாளில் இங்கிலாந்து அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

முதல்நாள் ஆட்டநேரம் முடிவில் இங்கிலாந்து அணி 89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்துள்ளது. மலான் 110, பேர்ஸ்டோவ் 75 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்குவது இது முதல் முறையாகும். கடந்த முறை 2015-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்தது. தற்போதைய ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com